மகாளய அமாவாசையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை அமோகம்: இல்லத்தரசிகள் ஆர்வம்; வியாபாரிகள் மகிழ்ச்சி

அண்ணாநகர்: மகாளய அமாவாசை மற்றும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று காய்கறிகள் விற்பனை அதிகரித்தது. இல்லத்தரசிகள் காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று, புரட்டாசி முதல் சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை முன்னிட்டு, 600 வாகனங்களில் தக்காளி, பீன்ஸ், கேரட், உருளை மற்றும் பீட்ரூட் என 6,000 டன் காய்கறிகள் கூடுதலாக வந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சில்லரை வியாபாரிகள் சரக்கு வாகனம், டூவீலர் என பல வாகனங்களில் மார்க்கெட்டில் குவிந்தனர். மேலும்,  ஏராளமான பொதுமக்களும் காய்கறிகள் வாங்க ஆர்வம் காட்டினர். இதனால், மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை அமோகமாக நடந்தது.  

காய்கறிகள் வாங்க ஒரே சமயத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விற்பனை அதிகரித்தும் காய்கறிகள் விலை உயராததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காய்கறிகள் சிறு, மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘‘புரட்டாசி மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை அனைத்து காய்கறிகளும் கூடுதலாக குவிந்துள்ளன. அனைத்து காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளதால் சில்லரை வியாபாரிகள் அதிகம் ஆர்வம் காட்டி அதிகளவில் காய்கறிகள் வாங்கிச்சென்றனர். ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.50ல் இருந்து ரூ.25க்கும், பெங்களூரூ தக்காளி ரூ.60ல் இருந்து ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டது. புரட்டாசி முதல் சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை என்பது விசேஷமானது. இதனால், அதிகளவில் காய்கறிகள் வாங்க இல்லத்தரசிகள் ஆர்வம் காட்டினர்’ என்றார்.

Related Stories: