திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சத்தியமங்கலத்தில் பாஜ பிரமுகர்களின் கார்கள் எரிப்பு

சென்னை: திண்டுக்கல், ராமநாதபுரம், சத்தியமங்கலம் அருகே புஞ்சை புளியம்பட்டியில் பாஜ பிரமுகர்களின் கார்கள், 5 டூவீலர்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் அருகே குடைபாறைபட்டியில் வசிப்பவர் செந்தில் பால்ராஜ். பாஜ மேற்கு மாநகரத்தலைவர். இவர் டூவீலர்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். இதற்காக வீட்டின் அருகே குடோனில் டூவீலர்களை நிறுத்தி வைத்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள், குடோனுக்குள் சென்று செந்தில் பால்ராஜின் கார் மற்றும் டூவீலர்களுக்கு தீ வைத்துள்ளனர். இதில் அவை பற்றி எரிந்தது. தகவலறிந்து தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் ஒரு கார் மற்றும் 5 டூவீலர்கள் எரிந்து நாசமாயின.

மதுரை: மதுரை மேலஅனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் எம்.எஸ்.கிருஷ்ணன். ஆர்எஸ்எஸ் மாநில நிர்வாகியான இவரது வீட்டில் அலுவலகம் மற்றும் கார்ஷெட்டை நோக்கி நேற்றிரவு அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. டூவீலரில் வந்த 2 பேர், இந்த பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பினர். அலுவலகப்பகுதி மற்றும் கார் ஷெட் பகுதியில் பரவிய தீயை அக்கம்பக்கத்தினர் வந்து அணைத்தனர்.

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் மனோஜ் குமார். பாஜ கட்சி ஆதரவாளரான இவர் கேணிக்கரை பகுதியில் கிளினிக் வைத்துள்ளார். கிளினிக் வளாகத்தில் நிறுத்தியிருந்த இவரது 2 கார்களை, நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினர். சிசிடிவி கேமரா பதிவு அடிப்படையில் போலீசார் இருவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் சிவசேகர் (48). பாஜ மாஜி நகர பொருளாளர். நேற்று முன்தினம் இரவு இவரது வீடு முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். 

Related Stories: