ஏனம்பாக்கம் கிராமத்தில் உடைந்து கிடக்கும் ஆரணியாறு பால தடுப்புகள்: சீரமைக்க மக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை:ஏனம்பாக்கம் கிராமத்தில் உடைந்து கிடக்கும் ஆரணியாறு பாலத்தின் தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் ஏனம்பாக்கம் கிராமம் உள்ளது இதை சுற்றி கல்பட்டு, மாளந்தூர், ஆவாஜிபேட்டை, மேல்மாளிகைப்பட்டு, கீழ்மாளிகைப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், மாணவ - மாணவிகள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

இவர்கள் விவசாய பொருட்கள் வாங்குவதற்கும், வேலைகளுக்கும், பள்ளி, கல்லூரிகளு செல்வதற்கும்,  இக்கிராமத்தையொட்டி உள்ள ஏனம்பாக்கம்  ஆரணியாற்றில் இறங்கி தண்டலம் சென்று அங்கிருந்து பெரியபாளையம், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்றனர்.

மழை காலத்தில் ஆற்றில் தண்ணீர் வந்தால் இந்த 20 கிராம மக்கள் செங்காத்தாகுளம் மற்றும் வெங்கல், சீத்தஞ்சேரி கிராமங்களின் வழியாகவும் 10 முதல் 20 கி.மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்கின்றனர். இதனால், ஏனம்பாக்கம்  - தொளவேடு ஆரணியாற்றின் இடையே கடந்த 2011 - 2012ம் ஆண்டு ரூ.6 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால், 20 கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சி விட்டனர்.  இந்நிலையில், இந்த மேம்பாலத்தின் தடுப்பு சுவர் திடீரென கடந்த 3 வருடத்திற்கு முன்பு   உடைந்து விட்டது. இதில், இரவு நேரத்தில் கிராமங்களுக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், நடைபாதையாக செல்லும் மக்களும் பாதிக்கப்படுகிறார்கள், பாலத்தின் தடுப்புகள் உடைந்தது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பாலத்தின் தடுப்புகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: