படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்த மாநகர பஸ் கண்டக்டர் மீது பள்ளி மாணவர்கள் தாக்குதல்: எண்ணூரில் போக்குவரத்து பாதிப்பு

திருவொற்றியூர்: எண்ணூரில் மாநகர பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை மேலே வரும்படி நடத்துநர் கண்டித்துள்ளார். ஆத்திரம் அடைந்த மாணவர்கள் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதனால் அங்கு 3 மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு, மீனவ கிராம சங்க நிர்வாகிகள் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை எண்ணூருக்கு செல்லும் மாநகர பேருந்து புறப்பட்டது. பேருந்து எண்ணூர், காமராஜர் சாலை வழியே சென்று கொண்டிருந்தது. அதில் 2 பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தனர். அவர்களை உள்ளே வரும்படி நடத்துநர் டேவிட் (45) கண்டித்துள்ளார். எனினும், பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்ததால் பேருந்தை டிரைவர் நிறுத்தி உள்ளார்.

இதில், ஆத்திரம் அடைந்த 2 பள்ளி மாணவர்களும் நடத்துநர் டேவிட்டிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் 2 மாணவர்களையும் கீழே இறக்கிவிட்டு விட்டு பேருந்து புறப்பட்டு சென்றது. இந்த பேருந்து எண்ணூர் பேருந்து நிலையத்துக்கு வரும்வரை 2 பள்ளி மாணவர்களும் மற்றொரு பேருந்தில் பின்தொடர்ந்தனர். அங்கு நின்றிருந்த நடத்துநர் டேவிட்டை 2 மாணவர்களும் சேர்ந்து சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த சக டிரைவர், கண்டக்டர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 2 பள்ளி மாணவர்களையும் பிடித்து எண்ணூர் போலீசில் ஒப்படைத்தனர். மாணவர்களின் தாக்குதலில் படுகாயம் அடைந்த நடத்துநர் டேவிட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து எண்ணூர் போலீசில் மாநகர போக்குவரத்து அதிகாரிகள் புகார் அளித்தனர். புகாரின்பேரில் 2 பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதாக பள்ளி மாணவர்கள், அவர்களின் பெற்றோர் கூறினர். இதை தொடர்ந்து, 2 பள்ளி மாணவர்களையும் எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பள்ளி மாணவர்கள் நடத்துனரை தாக்கியதால் எண்ணூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து காட்டுக்குப்பம், தாழங்குப்பம் வழியாக பேருந்தை இயக்க மறுத்த ஓட்டுனர், நடத்துனர்கள் கத்திவாக்கம் மேம்பாலம் வழியாக நேற்று காலை முதல் இயக்கினர். இதனால் காட்டுக்குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம் போன்ற பகுதியில் இருந்து மாநகர பேருந்தில் பயணிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதன் காரணமாக, எண்ணூர் பகுதியில் சுமார் 3 மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து மாநகர போக்குவரத்து அதிகாரிகளிடம் மீனவ கிராம சங்க நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று உறுதியளித்தனர். பின்னர், நேற்று காலை 7.45 மணியளவில் எண்ணூர் பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கமான பேருந்து போக்குவரத்து துவங்கியது. பள்ளி மாணவர்கள் கண்டக்டரை தாக்கியதை கேள்விப்பட்டதும் சக டிரைவர், கண்டக்டர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாணவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Related Stories: