வருண பகவான் கருணை காட்டியதால் குறுவை சாகுபடி நெல்மணிகள் அறுவடைக்கு தயார்-சம்பா நடவு பணிகளும் விறுவிறுப்பு

நீடாமங்கலம் : நீடாமங்கலம் பகுதிகளில் குறுவை சாகுபடி செய்த நெல்மணிகள் முதிர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளதால் விவசாயிகள் அறுவடைக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பொழிவால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை நிரம்பியது. இதனால் எப்போதும் இல்லாத அளவிற்கு மேட்டூர் அணை முன்னதாகவே திறக்கப்பட்டது. மேலும், அவ்வப்போது பெய்த மழைநீர் மற்றும் உபரிநீர் அதிகளவில் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டதால் டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.

மேலும் சம்பா சாகுபடிக்கான ஆயத்த பணிகளையும் விவசாயிகள் துவங்கியுள்ளனர். இதற்காக வயலில் புழுது உழவு மற்றும் கால்நடைகளை கொண்டு கிடை போட்டு இயற்கையான உரமிடுதல் மற்றும் நாற்றங்கால் தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி மும்முரமாக நடைபெற்றது.

டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 52 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் 50 ஆயிரம் ஏக்கர்களில் வேளாண் சார்ந்த பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 24ம் தேதி மேட்டூர் அணை திறந்து விட்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை விவசாயப் பணிகள் முடிந்துள்ளது. கடந்த ஆண்டு 17,500 ஏக்கரில் சம்பா சாகுபடியும், 26 ஆயிரம் ஏக்கரில் தாளடி சாகுபடியும் விவசாயிகள் மும்முரமாக தொடங்கி முடிந்துள்ளது.

இதில் 1,800 ஏக்கரில் தென்னை சாகுபடியும், 100 ஏக்கரில் காய்கறி சாகுபடியும், 50 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட சிறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் அதிக ரசாயன உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்ததால் மண்வளம் பல கிராமங்களில் பாதிப்படைந்துள்ளது. நீடாமங்கலம் தாலுகா பகுதியில் பல்வேறு கிராமங்களில் மண் வளத்தை மாற்றுவதற்கு இந்த ஆண்டு பல கிராமங்களில் கோடை சாகுபடியை விவசாயிகள் நிறுத்தி சில கிராமங்களில் சுமார் 6,000 ஏக்கரில் நிலத்தடி நீரில் மின் மோட்டாரை பயன்படுத்தி கோடை சாகுபடி செய்து அறுவடை முடிந்து குறுவை சாகுபடியை தொடங்கி கடம்பூர், பரப்பனாமேடு, சித்தமல்லி மேல்பாதி, பூவனூர், அனுமந்தபுரம், பெரம்பூர், காளாச்சேரி, மேலபூவனூர், காணூர், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம், அனுமந்தபுரம், தேவங்குடி, ரிஷியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட வயலில் நெல்மணிகள் அறுவடைக்கு தயாராக உள்ளது.

இதனால் விவசாயிகள் அறுவடைக்கு தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் கூலி ஆட்களை தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் கூடுதலாக திறக்கப்பட்டு, நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: