திருவிடந்தை ஊராட்சியில் இருளர்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு: வட்டாட்சியரிடம் பழங்குடியின மக்கள் மனு

திருப்போரூர்: திருவிடந்தை ஊராட்சியில் உள்ள இருளர் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என வட்டாட்சியரிடம் பழங்குடியின மக்கள் மனு அளித்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய திருவிடந்தை ஊராட்சியில் 21 இருளர் பழங்குடி குடும்பங்களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 2021ம் ஆண்டு இந்த 21 குடும்பங்களுக்கும் தனியார் நட்சத்திர ஓட்டல் சார்பில் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் தமிழக அரசின் அனுமதியுடன் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டது. இந்த வீடுகள் பணி முடிவடைந்து கடந்த ஆண்டே 21 பயனாளிகளுக்கும் ஒப்படைக்கப்பட்டு அதில் குடியேறி வசித்து வருகின்றனர்.

இந்த வீடுகளில் 9 வீடுகள் அமைந்துள்ள பகுதி கிராம நத்தம் வகைப்பாட்டில் வருவதாகவும், 12 வீடுகள் தரிசு புறம்போக்கு வகைப்பாட்டில் வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக 9 வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. மீதி உள்ள 12 வீடுகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. திருப்போரூர் வட்டாட்சியர் ஆட்சேபனை இல்லா கடிதம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்க முடியும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். இதன் காரணமாக 12 வீடுகளில் வசிப்பவர்கள் கான்கிரீட் வீடு இருந்தும் மின் இணைப்பு இல்லாமல் இருளில் தவிக்கின்றனர்.

அவர்களின் குழந்தைகள் பள்ளிகளுக்கு சென்று திரும்பி வந்து வீட்டுப்பாடம் முடிக்க இயலவில்லை என்று கூறி நேற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இருளர் பழங்குடி பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் நேற்று திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வந்து மனு அளித்து காத்திருந்தனர். தங்களுக்கு மின் இணைப்பு வழங்கினால் மட்டுமே நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும் என்றும், வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகம் மின் இணைப்பு வழங்க கடிதம் வழங்காதது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து 6 மாதங்களாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், திருப்போரூர் வட்டாட்சியருக்கு மனு அளித்தும் மின் இணைப்பு வழங்கவில்லை என்றும், இதன் காரணமாக வீண் அலைச்சல் ஏற்படுவதாகவும் இருளர் பழங்குடி பெண்கள் தெரிவித்தனர். ஆகவே, திருவிடந்தை ஊராட்சி இருளர் குடும்பங்களுக்கு விதி விலக்கு அளித்து அவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: