கோவையில் ஊருக்குள் புகுந்த காட்டு மாடு சிக்கியது: தடாகம் வனத்தில் விடுவிப்பு

கோவை: கோவை சரவணம்பட்டி அடுத்துள்ள கீரணத்தம் சகாரா சிட்டி எனப்படும் இடத்தில் கடந்த 17ம் தேதி ஒரு காட்டு மாடு நடமாடுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. கோவை வனச்சரக அலுவலர் அருண்குமார் தலைமையிலான 30 பேர் கொண்ட குழுவினர் காட்டுமாடு தேடும் பணியில் ஈடுபட்டனர். காட்டுமாடு சரவணம்பட்டியை அடுத்துள்ள வினாயகாபுரம் பகுதியில் கண்டறியப்பட்டது. பின்னர், காளப்பட்டி அருகில் சரவணம்பட்டியில் இருந்து வரும் ஓடை அருகே அடர்ந்த புதர் பகுதியினுள் காட்டு மாடு சென்றது.

இதனால், மாட்டை வனத்துறையினர் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து காட்டு மாட்டை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். அப்போது, காட்டுமாடு சின்னியம்பாளையம், ஆர்.ஜி புதூரை கடந்து சூலூர் மயிலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கரையான்பாளையம் என்ற ஊரில் வார்டு கவுன்சிலர் சந்திரசேகர் என்பவரது வீட்டின் அருகில் உள்ள காலியிடத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர். முன்னாள் வனக்கால்நடை மருத்துவர் மனோகரன், அரசு கால்நடை உதவி மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரால் காட்டு மாட்டிற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த காட்டுமாடு உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் கிரேன் மூலம் காட்டு மாட்டை பாதுகாப்பாக தூக்கி வனத்துறை வாகனத்தில் ஏற்றி கோவை வனச்சரகம் தடாகம் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மயக்கம் தெளிய வைக்கப்பட்டு வனத்தில் விடுவிக்கப்பட்டது.

Related Stories: