திருவில்லிபுத்தூரில் போதிய மழை இல்லாமல் வறண்டு கிடக்கும் பெரியகுளம் கண்மாய்

*பாசன நிலங்கள் பாதிப்பு: நிலத்தடி நீர் குறையும் அபாயம்

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய் வறண்டு கிடப்பதால், பாசன நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீர் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய், மாவட்டத்தில் உள்ள பெரிய கண்மாயாகும். சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் இந்த கண்மாய் அமைந்துள்ளது. கரைப்பகுதி மட்டும் 4.5 கி.மீ தூரமுள்ளது. இந்த தாலுகாவில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 120க்கும் மேற்பட்ட கண்மாய், குளங்கள் உள்ளன. இந்நிலையில், திருவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய் மூலம் சுமார் 1,000 ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தது.

தற்போது 700 ஏக்கர் வரை விவசாயம் செய்து வருகின்றனர். கண்மாய் நிரம்பும் காலங்களில் திருவில்லிபுத்தூர் மட்டுமல்லாமல், அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் நிலத்தடி நீர் உயரும். கண்மாயை ஒட்டி உள்ள பகுதியில் உள்ள வீடுகளில் போர்வெல்களில் நீர்மட்டம் உயரும். இதனால், பொதுமக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை குறையும். தற்போது தொடர்ச்சியான மழையின்மை, கொளுத்தும் வெயிலால் பெரியகுளம் கண்மாயில் நீர்மட்டம் குறைந்து வறண்டு கிடக்கிறது. கண்மாயின் ஒரு பகுதியில் மட்டும்தான் தண்ணீர் உள்ளது. கண்மாயின் முன்பகுதி முழுவதும், அதாவது கலிங்கல் அமைந்துள்ள பகுதியில் வறண்டு கிடக்கிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது.

பாசன நிலங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து பெரியகுளம் நீர்ப்பாசன விவசாய சங்க தலைவர் மோகன்ராஜ் கூறுகையில், ‘பெரியகுளம் கண்மாயில் முழுக் கொள்ளளவு தண்ணீர் இருந்தால், பிரச்னையில்லாமல் விவசாயம் செய்யலாம். ஆனால், தற்போது சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துவதால், இரண்டு போக விவசாயம் செய்து வருகிறோம்.

மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறுவதை தடுக்க, பெரியகுளத்தின் நான்கு பகுதியில் உள்ள மதகுகளில் உள்ள மரக்கட்டைகளை அகற்றி இரும்பினால் ஆன மதகுகளை அமைத்துள்ளோம். கண்மாயில் நீர்மட்டம் முழுமையாக இருக்கும்போது கிணறுகளில் நீர்மட்டம் கணிசமாக உயருகிறது. தற்போதைய சூழலில் சுமார் 25 நாட்கள் விவசாயத்திற்கு மட்டுமே பெரியகுளம் கண்மாயில் தண்ணீர் உள்ளது’ என தெரிவித்தார்.

Related Stories: