2023ல் இந்தியாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; மோடியின் தொகுதிக்கு புதிய அங்கீகாரம்.! உஸ்பெகிஸ்தானில் தலைவர்கள் தீர்மானம்

புதுடெல்லி: அடுத்தாண்டு இந்தியாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதிக்கு புதிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான்,  உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் உட்பட எட்டு நாடுகளை உள்ளடக்கிய பொருளாதார  மற்றும் பாதுகாப்பு கூட்டணி நாடுகளின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்  தலைமையகம் பீஜிங்கில் உள்ளது. இந்தாண்டுக்கான  ஷாங்காய் ஒத்துழைப்பு  அமைப்பின் மாநாடு உஸ்பெகிஸ்தானில் நடந்து முடிந்தது.

அடுத்தாண்டு இந்த  மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. அதனால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதல் கலாசார மற்றும் சுற்றுலாத் தலைநகராக வாரணாசி (பிரதமர் மோடியின் எம்பி தொகுதி) அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா கூறுகையில், ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அடுத்தாண்டு இந்தியாவில் மாநாடு நடத்தப்படும்.

2022-23ம் ஆண்டிற்கான குழுவின் முதல் சுற்றுலா மற்றும் கலாச்சார தலைநகராக வாரணாசியை மாநாட்டு தலைவர்கள் அங்கீகரித்தனர். இதற்காக அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவிற்கும், பிற நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் புதிய உறவுகள் ஏற்படும். வாரணாசிக்கு அளிக்கப்பட்ட இந்த அங்கீகாரத்தை தொடர்ந்து உத்தரபிரதேச அரசுடன் இணைந்து, ஒன்றிய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும்’ என்றார்.

Related Stories: