வடசென்னை அனல் மின் நிலைய திட்ட பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார்

சென்னை: மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வடசென்னை அனல் மின் திட்டம் நிலை 3  பணிகளை ஆய்வு செய்தார். இன்று மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில்பாலாஜி  அவர்கள் வட சென்னை அனல் மின் திட்டம் நிலை-3 (1x800 மெகாவாட்) திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு. ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப.,  இயக்குனர் (திட்டம்) (பொ)  திரு.எம்.இராமச்சந்திரன், இயக்குநர் (உற்பத்தி) (பொ) திரு.த.இராஜேந்திரன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

அமைச்சர் அவர்கள் வட சென்னை அனல் மின் திட்டம் நிலை-3ல் (1x800மெகாவாட்) நடைபெற்றுவரும் கட்டுமான பணிகளான சுழலி மற்றும் அதை சார்ந்த எந்திரங்கள், குளிர்ந்த நீர் கொண்டு செல்லும் பைப்கள் அமைக்கும் பணிகள், கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையத்தில் (RO-DM Plant) நடைபெறும்பணிகள்,     765 கிலோ வோல்ட் GIS துணை மின் நிலையத்தில் நடைபெறும்பணிகள், நிலக்கரி கொண்டு செல்லும் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு விபரங்களை கேட்டறிந்து விரைவாக முடிக்க உத்தரவுகளை வழங்கினார்.

இதர பணிகளான குளிரூட்டும் கோபுரத்தின் எஞ்சிய பணிகள், கொதிகலன் எரியூட்டப்பட்டு சுழலிக்கு கொண்டு செல்லும் நீராவி குழாய்களை சுத்தம் செய்து  சுழலி-மின்னாக்கி இயக்கத்திற்கு கொண்டு வரப்படும் என்றும், மின் உற்பத்தியை மின் தொகுப்பில் இணைத்து பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல தேவையான மின் கோபுரங்கள்அமைக்கும் பணிகள் விரைவில் முடிவடையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேரடி ஆய்விற்கு பின் மாண்புமிகு அமைச்சர் அவர்கள்ஆய்வு கூட்டம் நடத்தினார்கள். அதில் திட்டப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.  இந்த நிதி ஆண்டுக்குள் பணிகள் நிறைவுற்று மின் உற்பத்தியை தொடங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், திட்டத்தின் மற்ற இதர பணிகளான  கரிகையாளும் அமைப்பு, சாம்பல் கையாளும் அமைப்பு, கடல்நீரை குடிநீராக்கும் அமைப்பு ஆகியவை குறித்து  ஆலோசனை மேற்கொண்டார்.

குளிர்ந்த நீர் கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் பணிவிவரங்களை கேட்டறிந்த அமைச்சர் அவர்கள் இப்பணியின்  தேவையை உணர்ந்து கூடுதல் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களின் உதவிகொண்டு போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மேலும் அதிகரித்து வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு திட்டத்தை விரைந்து முடிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு வாரிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

Related Stories: