தமிழகத்தில் இதுவரை மொத்தம் 965 பேருக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் இதுவரை மொத்தம் 965 பேருக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல் கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியமில்லை. பள்ளிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அவர்களை ஆசிரியர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு என்பது தவறான தகவல். பெரிய அளவில் மருந்து தட்டுப்பாடு இருப்பது போல மாய தோற்றம் உண்டாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 3 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசியமான 327 மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள் அரசின் மீதான கோபத்தில் மருத்துவர்கள் தட்டுப்பாடு என வதந்தி பரப்புகின்றனர். அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இருந்தால் பொதுமக்கள் 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: