காவல்காரன்பட்டி வடசேரி வழியாக நெடுஞ்சாலைக்கு செல்லும் ஒருவழி சாலை அகலப்படுத்தப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தோகைமலை: தோகைமலை அருகே உள்ள காவல்காரன்பட்டி வடசேரி வழியாக திருச்சி- திண்டுக்கல் நான்கு வழி சாலை வரை செல்லும் ஒரு வழி சாலையை இருவழி சாலையாக விரிவுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள வடசேரி ஊராட்சி கரூர் மாவட்டத்தின் தென் கிழக்கு எல்லையில் கடைசி பகுதியாக உள்ளது. காவல்காரன்பட்டியில் இருந்து வடசேரி, தென்நகர் வழியாக திருச்சி மாவட்ட எல்லையான திருச்சி- திண்டுக்கல் 4 வழிச்சாலை வரை சுமார் 4 கிலோ மீட்டர் வரை நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டின் ஒரு வழிச்சாலை செல்கிறது.

இந்த சாலை வழியாக புத்தூர், கள்ளை, நங்கவரம், நெய்தலூர், ஆலத்தூர், ஆர்ச்சம்பட்டி தோகைமலை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். இதேபோல் பாளையம் திருச்சி மெயின் ரோடு மற்றும் கரூர் திருச்சி மெயின்ரோடு வழியாக கரூர் மாவட்டம், நாமக்கல், சேலம் போன்ற வட மாவட்டங்களில் இருந்து கனரக வாகனங்கள் திருச்சி மாவட்டம் மற்றும் தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு திருச்சி நகரை கடந்து செல்லவேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க திண்டுக்கல் -திருச்சி 4 வழிச்சாலையை அடைவதற்கு காவல்காரன்பட்டி வடசேரி வழியாக செல்லும் ஒரு வழிச்சாலையை பயன்படுத்துகின்றனர்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதங்களில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் கன்னிமாரம்மன், பெரியக்காண்டியம்மன் கோவில் திருவிழா மிகச்சிறப்பாக நடக்கும். மாசி மாதம் முழுவதும் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதில் வீரப்பூர் கன்னிமாரம்மன், பெரியக்காண்டியம்மன் கோவில் திருவிழாவோடு தொடர்புடைய காளிதேவி என்ற காளியம்மன் கோவில் தோகைமலை அருகே உள்ள வடசேரியில் அமைந்து உள்ளது.

இதனால் வீரப்பூர் கன்னிமாரம்மன், பெரியக்காண்டியம்மன் கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் தோகைமலை அருகே வடசேரி பெரிய ஏரியை ஒட்டி உள்ள காளிதேவி கோவிலுக்கும் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

வீரப்பூர் திருவிழாவின் போது வரும் பக்தர்கள் காவல்காரன்பட்டி வடசேரி வழியாகவும், திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்தும் வடசேரியில் உள்ள காளிதேவி கோவிலுக்கு பேருந்துகள் உள்பட பல்வேறு வாகனங்களில் வருகின்றனர். இதனால் மாசி மாதங்கள் முழுவதும் காவல்காரன்பட்டி வடசேரி சாலையில் வாகனங்களின் நெருக்கடி அதிகமாக காணப்படும். ஒரு வழிச்சாலையாக இருப்பதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வதற்கு இடமில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகின்றது.

இதனால் ஒரு வழிச்சாலையாக உள்ள இந்த சாலையில் ஒரே நேரத்தில் எதிர்எதிர் திசையில் இரு வாகனங்கள் கடக்கும்போது மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகன ஓட்டிகளும் சிரமத்துடன் சென்று வருவதோடு விபத்துக்கள் ஏற்படும் நிலையும் இருந்து வருகிறது. கனரக வாகனங்கள் அதிகளவில் வருவதால் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து காவல்காரன்பட்டி வடசேரி ஒரு வழிச் சாலையை இரு வழிச்சாலையாக விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: