மோசடி ஆவணப்பதிவு ரத்து செய்யும் அதிகாரம் நடைமுறையை வரும் 28-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக பதிவுத்துறையில் மோசடி ஆவணப்பதிவு ரத்து செய்யும்  அதிகாரம் நடைமுறையை வரும் 28-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழக பதிவுத்துறையில் ஒரு வரலாற்று நிகழ்வாக அமைய இருக்கும் மோசடி ஆவணப்பதிவு ரத்து செய்யும்  அதிகாரம் நடைமுறைப்படுத்தப்படுவதை  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்வரும் 28.9.2022 அன்று துவக்கி வைக்கிறார்கள்.  

கடந்த காலங்களில் நில அபகரிப்பாளர்களால் நிகழ்த்தப்பட்ட மோசடி பதிவுகளினால் தங்களது சொத்துக்களை இழந்த உண்மையான நில உரிமையாளர்களுக்கு உரிய விசாரணைக்குப்  பிறகு அவர்களது சொத்துக்கள் மீட்கப்பட்டு  வழங்கப்படும்.

இந்த அதிகாரத்தை வழங்குவதற்காக  ஒன்றிய சட்டமான பதிவு சட்டம், 1908-ல் உரிய சட்ட திருத்தம் கொண்டுவர  சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மேதகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு  நடைமுறைக்கு வருகிறது.

இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாய் தமிழ்நாட்டின் பதிவுத்துறை இந்த முன்னெடுப்பைச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக பதிவுத் துறைக்கு வழங்கப்பட உள்ள இந்த அதிகாரம் மோசடி பதிவுகளை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோசடி பதிவுகளுக்கு தெரிந்தே துணை போகும் பதிவு அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரவும் இந்த சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது உற்று நோக்கத்தக்கது.

Related Stories: