மாணவர்களுக்கான சிற்பி மற்றும் காலை உணவு திட்டம்; தமிழக சரித்திரத்தில் முத்திரைப் பதிக்கும் திட்டமாக அமையும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விக்கிரமராஜா பாராட்டு

சென்னை: மாணவர்களுக்கான சிற்பி மற்றும் காலை உணவு திட்டம் ஆகியவை தமிழக சரித்திரத்தில் முத்திரைப் பதிக்கும் திட்டமாக அமையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விக்கிரமராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழக அரசு சார்பில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், முதல்வர்  மு.க.ஸ்டாலின் ‘சிற்பி’ திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். சிறுவர்களை சமூக ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும்.

அது நம் கடமை என்பதை வலியுறுத்தி புதியதொரு திட்டத்தை, வளர்ந்து வரும் இளம் சமுதாயத்திற்காக மாணவர்களுக்கு புதிய சீருடை, பல்வேறு பயிற்சிகள் வழங்கவும், வளர்ந்துவரும் சிறுவர் குற்றங்களை தடுக்கவும், போதைப்பொருள் உள்ளிட்ட தீய பழக்கங்ளை தவிர்க்கவும் எடுத்துள்ள இந்த சீரிய நடவடிக்கைக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பாராட்டுக்களை நன்றி உணர்வோடு தெரிவித்துக் கொள்கின்றது. ‘சிற்பி’ திட்டத்தினால் குற்றங்கள் குறையும் என்பதைவிட குற்றங்களே நிகழாமல் தடுக்கப்படும் என்ற உறுதியோடு காவல்துறை இந்த சிற்பி திட்டத்தின் மென்பொருளை அறிமுகப்படுத்தியிருப்பது சிறுவர்களை இளமைக்காலம் முதலே பொது ஒழுக்கம் உள்ளவர்களாகவும், சமூக பொறுப்பு உள்ளவர்களாகவும் உருவாக்கும் என்பது உறுதி.

மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில், இளம் சிறார்களுக்கான ‘காலை உணவுத் திட்டத்தை’ தொடங்கி வைத்துள்ளார். அடித்தட்டு ஏழை, எளிய பள்ளி செல்லும் குழந்தைகளின் பசியறிந்து பசியினை போக்கி கல்வி வளர்ச்சியில் நாட்டத்தை செலுத்துவதற்கான நோக்கத்துடன் தொடங்கி வைத்துள்ளார். இந்த காலை உணவுத்திட்டம் தமிழக சரித்திரத்தில் முத்திரைப் பதிக்கும் திட்டமாக அமையும் என்பதை பெரும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: