தொலைநோக்கு பார்வையால் வளர்ச்சி பாதையில் இந்தியா செல்கிறது: ஜனாதிபதி முர்மு பெருமிதம்

புதுடெல்லி: தொலைநோக்கு பார்வைதான் இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறது என்று ஜனாதிபதி முர்மு  பெருமிதம் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 62வது வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஜனாதிபதி மாளிகையில் நேற்று சந்தித்தனர். அவர்களிடையே ஜனாதிபதி முர்மு பேசியதாவது: வேகமாக இயங்கிவரும் உலகில் நாம் வசிக்கிறோம். இதில் சிறிய மாற்றம் கூட பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். கொரோனா தொற்றின் வேகமும், பரவலும் மனிதகுலம் எதிர்கொண்ட அச்சுறுத்தலுக்கு ஒரு உதாரணம்.   

பருவநிலை மாற்றமும், நீடித்த வளர்ச்சியும் இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களாக உள்ளன. இவற்றுக்கு தீர்வு காண நாடுகள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். தொலைநோக்கு பார்வைதான் இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறது. சமீபத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான விக்ராந்த் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையான தருணம் ஆகும். இத்தகைய நடவடிக்கைகள் மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: