ஆம்பூரில் இன்று காலை பயங்கரம்; கன்டெய்னர் லாரி மோதி 2 மாணவிகள் பலி

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தண்டபாணி(45). இவரது மனைவி அனு. இவர்களது மகள் ஜெய(16), வர்ஷாஸ்ரீ(11). இதில் ஆம்பூர் அடுத்த புது கோவிந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஜெயஸ்ரீ 11ம் வகுப்பும், வர்ஷாஸ்ரீ 6ம் வகுப்பும் படித்து வந்தனர்.  

இந்நிலையில் இன்று காலை 8மணியளவில் தண்டபாணி, ஜெயஸ்ரீ, வர்ஷாஸ்ரீ இருவரையும் பைக்கில் பள்ளிக்கு அழைத்துச்சென்றார். மஜ்ஹருல் உலூம் மேல்நிலை பள்ளி அருகே வந்தபோது சாலையில் சிக்னல் போடப்பட்டது.

இதனால் தண்டபாணி சிக்னலில் காத்திருந்தார். அப்போது பெங்களூருவில் இருந்து வேலூர் நோக்கி வந்த 40அடி நீளமுள்ள ராட்சத கன்டெய்னர் லாரி அதிவேகத்தில் தண்டபாணி பைக் மீது மோதிவிட்டு சாலை தடுப்புகளை உடைத்துக்கொண்டு சர்வீஸ் சாலைக்குள் புகுந்தது. அப்போது லாரியில் இருந்த கன்டெய்னர்கள் சாலையில் கவிழ்ந்து உருண்டு மின்கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் ஜெயஸ்ரீ, வர்ஷாஸ்ரீ இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தண்டபாணி மற்றும் சாலையோரம் காத்திருந்த ஒருவர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த தண்டபாணி உள்பட 2பேரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் விபத்துக்குள்ளான லாரி, கிரேன் மூலம் அகற்றப்பட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து நடந்தபோது பொதுமக்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். இதனால் கவிழ்ந்து கிடக்கும் ராட்சத கன்டெய்னருக்கு அடியில் யாராவது சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: