அதிமுக ஆட்சியில் கிராவல் மண் டெண்டரில் முறைகேடு கனிமவளத்துறை இணை இயக்குநர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் ரெய்டு

தர்மபுரி: கிராவல் மண் டெண்டர் முறைகேடு தொடர்பாக, தர்மபுரியில் கனிமவளத்துறை இணை இயக்குநர் வீட்டில் நேற்று சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தி, 12 முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.தர்மபுரி டவுன் சூடாமணி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (52). இவர் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களின் கனிமவளத்துறை இணை இயக்குநர். இவரது சொந்த ஊர் சேலம். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் சேலம் நெடுஞ்சாலை நகரில் தான் இவரது வீடும் உள்ளது. தற்போது குடும்பத்துடன் தர்மபுரியில் வசிக்கிறார். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரருக்கு இவர் மிகவும் நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

கடந்த 2014-2017ல் அதிமுக ஆட்சியின்போது, சேலத்தில் சுரேஷ் பணியாற்றிய போது, ஏரி மற்றும் குளங்களில் கிராவல் மண் எடுக்க டெண்டர் விட்டதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதன் பேரில், சேலம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைதொடர்ந்து சுரேஷ் சென்னை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கனிமவளத்துறை இணை இயக்குநராக பொறுப்பேற்றார். தற்போது அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று காலை 8.30 மணிக்கு, 3 கார்களில் சேலம் சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐ.கள் உள்ளிட்ட 10 பேர் குழுவினர், கனிமவளத்துறை இணை இயக்குநர் சுரேஷ் வீட்டிற்கு வந்து, அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை பிற்பகல் 2.30 மணிக்கு முடிந்தது. சுமார் 6 மணி நேரம் நடந்த சோதனையில், பல்வேறு சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட 12 ஆவணங்களை, சிபிசிஐடி அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தெரிகிறது.

சோதனையின் போது, சுரேஷ் வீட்டில் இல்லை. அவரது மனைவி பிரியா மட்டுமே இருந்தார். சுரேஷ் அப்பகுதியில் புதிதாக 2 மாடியுடன் கூடிய வீடு கட்டி வருகிறார். அவருக்கு சேலம், கிருஷ்ணகிரி, சென்னையில் வீடுகளும், சேலத்தில் ஓட்டலும், காரிமங்கலத்தில் திருமண மண்டபமும் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் பல அதிமுக மாஜி அமைச்சர்கள் சிக்குகின்றனர்? அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், உறவினர்கள் மற்றும் பினாமிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று கனிம வள துறை இணை இயக்குநர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். இதில் பல முன்னாள் அமைச்சர்கள் சிக்குவார்கள் என தெரிகிறது.

Related Stories: