டிக் டாக்கில் காதலித்து ஏமாற்றியதாக சிவகங்கை இளைஞர் மீது சிங்கப்பூர் பெண் புகார்: மணப்பெண் பெற்றோர் திருமணத்தை நிறுத்தினர்

தேவகோட்டை: டிக் டாக் மூலம் காதலித்து ஏமாற்றியதாக சிவகங்கை இளைஞர் மீது சிங்கப்பூர் பெண் புகாரளித்தார். இதையடுத்து மணப்பெண்ணின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தினர்.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே புத்தூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் சிங்கப்பூரில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், கண்ணங்குடியைச் சேர்ந்த பெண்ணிற்கும் கடந்த 12ம் தேதி தேவகோட்டையில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடப்பதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் சிங்கப்பூரில் இருந்து சியாமளா என்ற பெண், ஆன்லைன் மூலம் சிவகங்கை மாவட்ட எஸ்பிக்கு புகார் மனு ஒன்று அனுப்பினார்.

அதில், ‘‘பிரபு டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டதில் எங்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. என்னை திருமணம் செய்வதாக அவர் கூறியதை நம்பி, இருவரும் இணைந்து பல டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டோம். பிரபு  சிங்கப்பூர் வந்து எங்கள் வீட்டிலேயே தங்கி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபு சொந்த ஊருக்கு சென்றார். தற்போது அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய போவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. என்னை ஆசைகாட்டி ஏமாற்றிய பிரபுவை கைது செய்ய வேண்டும்’’ என கூறியிருந்தார்.

இதையடுத்து தேவகோட்டை டவுன் போலீசார், பிரபுவை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், ‘‘சியாமளா ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து என்னிடம் பழகியுள்ளார். இது எனக்கு தெரிய வந்ததால், அங்கிருந்து நான் சொந்த ஊருக்கு திரும்பினேன்’’ என பிரபு தெரிவித்தார். இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். தகவலறிந்த பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: