ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளை தொடக்கம்; பிரதமர் மோடி இன்று உஸ்பெகிஸ்தான் பயணம்.! ரஷ்ய அதிபரை தனியாக சந்திக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்

புதுடெல்லி: உஸ்பெகிஸ்தானில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தொடங்கவுள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து  சமர்கண்ட் செல்கிறார். தொடர்ந்து ரஷ்ய அதிபர் புடினை தனியாக சந்திக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகளின் தலைவர்கள் 2001ல் ஷாங்காய் நகரில் கூடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை (எஸ்சிஓ) உருவாக்கினர். இந்த அமைப்பில் கடந்த 2017ல் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளும் இணைந்தன. ஐரோப்பிய, ஆசிய நாடுகளின் மொத்த நிலப்பரப்பில் 60 சதவீத நிலப்பரப்பு மற்றும் உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ 40 சதவீத மக்கள்தொகை இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளில் வசிக்கின்றனர்.

சுழற்சி முறையில் ஆண்டுக்கு ஒரு நாடு இந்த அமைப்புக்குத் தலைமை வகிக்கும். இவ்வாறு தலைமை வகிக்கும் நாடு, ஆண்டுதோறும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டை தலைமை வகித்து நடத்தும். அந்த வகையில் 22வது உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் வரும் 15, 16ம் (நாளை, நாளை மறுநாள்) தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகளின் தலைவர்கள், அமைப்பின் பொதுச் செயலர்கள், எஸ்சிஓ மண்டல தீவிரவாத தடுப்பு கட்டமைப்பின் செயல் இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு, உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்ஜியோயேவ் அழைப்பு விடுத்திருந்தார். இதையேற்று, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று பிரதமர் மோடி டெல்லியில் இருந்து உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.

மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 15 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனால் நாளை தொடங்கும் மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசுவார் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. எனினும், சமீபகாலமாக மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை, பிரதமர் மோடி சந்திப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை. உக்ரைனுடனான போருக்கு மத்தியில் ரஷ்யா - இந்தியா இடையிலான உறவு மேலும் வலுப்பெற்றுள்ளதால் மோடி - புடின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related Stories: