விழுப்புரத்தில் இருந்து சென்னை வந்து கைவரிசை ‘சண்டே திருடன்’ பிடிபட்டான்: கொள்ளையடித்த நகை, பணத்தில் உல்லாச வாழ்க்கை

சென்னை: பூந்தமல்லி  மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சென்னீர் குப்பம், திருவேற்காடு  ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகளை உடைத்து தங்க நகைகள் கொள்ளைபோகும்  சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில், திருட்டில் ஈடுபட்டு  வருபவரை பிடிக்க ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்பேரில்,  துணை ஆணையர் மகேஷ் மேற்பார்வையில் பூவிருந்தவல்லி உதவி கமிஷனர்  முத்துவேல்பாண்டி, இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி  தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை  ஆய்வு செய்ததில் தொடர்ச்சியாக ஒரே நபர் தனியார் கம்பெனி சீருடை அணிந்தும்,  கையில் ஒரு பை வைத்தும் அப்பகுதியில் நடமாடுவது கண்டு பிடிக்கப்பட்டது.

குறிப்பாக, ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த நபரின் நடமாட்டம் அதிக காணப்பட்டது.  இதையடுத்து தனிப்படை போலீசார் சிசிடிவி பதிவின் மூலம் குற்றவாளியை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில்  போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது ஷேசா நகர் பகுதியில்  சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து அவரிடமிருந்த பையை  சோதனை செய்த போது கட்டிங் பிளேயர், ஸ்க்ரு டிரைவர் போன்ற உபகரணங்கள்  இருந்தது. மேலும் அவரிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில்  அளித்துள்ளார். இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வசாரணை  செய்தனர்.

அதில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, சங்கராபுரம் பகுதியை சேர்ந்த  சிவச்சந்திரன் (32) என்பதும், இவர் தனது மனைவியுடன்  திருவேற்காடு, பள்ளிக்குப்பம், சுந்தரசோழபுரம் ஆகிய பகுதிகளில் வாடகை  வீட்டில் தங்கியிருந்து ஸ்ரீபெரும்புதூர், செட்டிபேட்டில் உள்ள தனியார்  கம்பெனியில்  வேலைபார்த்து வந்துள்ளார். இவருக்கு குழந்தை இல்லாததால்  மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரிந்தது. மேலும் விசாரணையில்  பூந்தமல்லி, சென்னீர்குப்பம் மற்றும் திருவேற்காடு ஆகிய பகுதிகளில் கடந்த 2  ஆண்டுகளாக பூட்டிய வீடுகளை உடைத்து தங்க நகைகளை திருடி  வந்தது விசாரணையில் தெரியவந்தது. இவர் வாரத்தில் 6 நாட்கள்  விழுப்புரத்தில் தங்கி கொண்டு வேலை செய்வார். வாரம்தோறும்  ஞாயிற்றுக்கிழமைகளில் கம்பெனி சீருடையில் சென்னை வந்து, இரவு நேரத்தில் பூந்தமல்லி  மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து  கொள்ளையடிப்பது தெரியவந்தது.

அவரை கைது செய்து அவரிடம்  இருந்து 10 சவரன் நகைகளை மீட்டனர். மேலும் திருடிய நகைகளை வழக்கமாக  ஆவடியில் உள்ள அட்டிக்கா என்ற தங்க நகை நிறுவனத்தில் விற்று பணம் பெற்று  வந்தது தெரியவந்தது. எனவே ஆவடியில் உள்ள அட்டிக்கா தங்க நகை நிறுவனம்  தொடர்ந்து திருட்டு நகைகளை வாங்கி விற்பது தெரியவந்தது. இதையடுத்து அட்டிகா  நிறுவனம் மற்றும் மேலாளர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை  நடத்திவருகின்றனர்.  மேலும் துரிதமாக செயல்பட்டு நகைகளை மீட்ட ரோந்து  போலீசார் மற்றும் தனிப்படை போலீசாரை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர்  பாராட்டினார்.

Related Stories: