காவல் நிலையம் அழைத்து சென்றதால் மனஉளைச்சல் மருத்துவர்களுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதால் மன உளைச்சலுக்கு உள்ளான 2  மருத்துவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு கலைக் கல்லூரி, கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு, பல்வேறு ஊர்களில் இருந்து மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா சிகிச்சை மைய பணிக்காக வந்திருந்த சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மணிகண்டன், பார்த்திபனூர் மருத்துவர் விக்னேஷ் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி இரவு 8.30 மணி அளவில் சாப்பிடுவதற்காக அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்றனர்.

அப்போது அங்கு வந்த பரமக்குடி டி.எஸ்.பி வேல்முருகன், மருத்துவர்கள் இருவரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, நீண்ட நேரம் வெளியில் காக்க வைத்துள்ளார். இதற்கிடையில் மருத்துவர்கள் இரண்டு பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற தகவல் அறித்து மருத்துவ சங்க நிர்வாகிகள் காவல் நிலையம் சென்று போலீசாரிடம் விளக்கமளித்த நிலையில் அதிகாலை ஒரு மணியளவில் மருத்துவர்கள் இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அச்செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயசந்திரன் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தார். இதையடுத்து போலீஸ் வாகனத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதால் மன உளைச்சலுக்கு உள்ளான மருத்துவர்கள் இரண்டு பேருக்கும் இழப்பீடாக தலா ரூ.25 ஆயிரத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என நீதிபதி துரை ஜெயசந்திரன் உத்தரவிட்டள்ளார்.

Related Stories: