புழல் காவாங்கரை ஜிஎன்டி சாலையில் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும் பொதுமக்கள்

புழல்: புழல் காவாங்கரை ஜிஎன்டி சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். புழல் காவாங்கரை ஜிஎன்டி சாலையில் இருந்து பிள்ளையார் கோயில் தெரு, குரு சாந்தி நகர், சாந்தினி அவன்யூ, திருநீலகண்ட நகர், புழல் ஏரி, கால்வாய் பாலம் வரை சுமார் 2 கிமீ தூரத்துக்கு இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. சாலையோரத்தில் டிபன் கடை, பழக்கடைகளும் உள்ளன. இச்சாலை மிகவும் குறுகலானது. இப்பகுதியில் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை.

அதனால் கடைகளுக்கு வருபவர்கள், தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்துகின்றனர். கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காவாங்கரை ஜிஎன்டி சாலை-பிள்ளையார் கோயில் சந்திக்கும் இடத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தாறுமாறாக செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. சில நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.

மேலும், இப்பகுதியில் பொது கழிப்பிட வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவசர நிலையில் மறைவிடங்களில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனர்.

Related Stories: