ஸ்ரீரங்கம் கோயிலில் உபய நாச்சியார்களுடன் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்

ஸ்ரீரங்கம்: பவித்ர உற்சவத்தையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர்  கோயில்  பூலோக வைகுண்டம் என போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் பவித்ரோத்சவம் எனப்படும் நூலிழை திருநாள் 9 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பவித்ரோத்சவம் கடந்த 6ம் தேதி துவங்கியது. பவித்ரோத்சவத்தையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினம்தோறும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்க கொடிமரத்திற்கு அருகில் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

7ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசல் எதிரே உள்ள கருட மண்டபத்துக்கு இரவு 7.30 மணியளவில் வந்தடைந்தார். அங்கிருந்தவாறு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழா நிறைவு நாளான நாளை (14ம் தேதி) காலை 10 மணியளவில் நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

Related Stories: