திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் படகு இல்லத்தில் உள்ள நிழற்கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது

*ஏரியை சுற்றியுள்ள நடைபாதையை முட்புதர்கள் ஆக்கிரமிப்பு

*சுற்றுலாப் பயணிகள் முகம் சுழிப்பு

ஏலகிரி மலை : ஏலகிரி மலை புங்கனூர் பகுதியில்  படகு இல்லதில்  அமைந்துள்ள நிழற்கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. மேலும் ஏரியை சுற்றியுள்ள நடைபாதையை  முட்புதர்கள் ஆக்கிரமித்துள்ளன.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழ்நாட்டில் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இது பெங்களூர், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார்பேட்டை  அருகில்  இம்மலை அமைந்துள்ளது.

 ஏலகிரி மலை சுமார் 1410.60  மீ உயரத்தில் உள்ளது. ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,700,20 மீ உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது.       இங்கு படகு இல்லம், இயற்கைபூங்கா, சிறுவர் பூங்கா, சாகச விளையாட்டுக்கள், சுவாமிமலை, பறவைகள் சரணாலயம், நிலாவூர் ஏரி, கதவ நாச்சி அம்மன் திருக்கோயில், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, போன்ற சுற்றுலா தளங்கள் இம்மலையில் அமைந்துள்ளன.

இதனை காண பல மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும், குடும்பத்தோடும், நண்பர்களுடனும், அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் முக்கிய சுற்றுலா திடல்களில் ஒன்றான  புங்கானூர் ஏரியான படகு இல்லம் அதிக சுற்றுலா பயணிகள் வரும் இடமாக உள்ளது. இந்த ஏரி சுமார் 10 முதல் 20 அடி ஆழம் வரையுள்ளது. இதன் பக்கத்தில் நிழற்குடம் ஒன்று அமைந்துள்ளது. மேலும் இந்த  ஏரியைச்சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு நடைவழி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரிக்கு அருகில் குழந்தைகள் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்  சிறுவர்களுக்கு ₹5 நுழைவுக் கட்டணம் என்றும், பெரியவர்களுக்கு ₹15 நுழைவுக்கட்டணம் என்றும் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். ஏரியில் உள்ள நிழல்கூடம்  பராமரிப்பு இன்றி, பாட்டில்கள், குப்பைகள், காணப்பட்டு மிக மோசமான நிலையில்    காணப்படுகிறது என்றும், இங்குள்ள கழிப்பறை மின்விளக்கு இன்றி துர்நாற்றம் வீசுவதாகவும் முகம் சுழிக்கும் வகையில் காணப்படுகிறது என்றும், ஏரியில்  ஆபத்தான மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன என்றும்,  சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நிழற் கூடத்தில்   இரவு நேரங்களில் மது, மாது போன்ற குற்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன என இங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறியுள்ளனர். மேலும்  இந்த ஏரியை சுற்றி ஒரு கிலோ மீட்டர் நடை பாதை உள்ளது. ஆனால் தற்போது நடைபாதைகளை மூடி  வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்பாதைகள் முறையான பராமரிப்பு இல்லாமல் முட்புதர்களாலும், குப்பைகளாலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

மேலும் முட்புதர்கள் அகன்று இருப்பதனால் இங்கு பாம்பு போன்ற விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. மேலும் படகு இல்லத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த வேலி இல்லாமல் சமூக விரோதிகள், மது பிரியர்கள், எளிதாக படகு இல்லத்தில் நுழைகின்றனர். இப்படி இருக்கும் சமயத்தில் இங்கு பல குற்ற சம்பவங்கள் நடக்க  வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.

இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தோடு வருவதால் இது போன்ற சம்பவங்களை பார்த்து முகம் சுளிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, படகு இல்லத்தை மேம்படுத்த வேண்டும் என்றும், கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், ஏரியைச் சுற்றியுள்ள நடைபாதையை விரைவில் திறந்து வைக்க வேண்டும் என்றும், ஏரியில் சாய்ந்திருக்கும் மரங்களை அகற்ற வேண்டும் என்றும்,   சுற்றுலாப் பயணிகளும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: