திருப்போரூர்: பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெற மூன்று அலுவலகங்களுக்கு அலையும் நிலை ஏற்படுவதால், பொதுமக்களுக்கு வீண் அலைச்சலும் கால தாமதமும் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே, ஒரே இடத்தில் பொதுமக்கள் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் வழங்கப்படும் பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி எல்லைகளில் நடைபெறும் பிறப்பு, இறப்பு பதிவுகள் அந்தந்த உள்ளாட்சி மன்ற அலுவலகங்களில் பராமரிக்கப்படுகிறது.
இதனிடையே கிராமப்புற பிறப்பு, இறப்பு பதிவேடுகள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு அந்தந்த கிராமங்களின் சொத்துக்கள் பதிவு செய்யப்படும் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சார்பதிவாளர் என்பவர் அரசு ஆணையின்படி பிறப்பு, இறப்பு பதிவாளராகவும் செயல்படுவதால் இவ்வாறு மாற்றம் செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. அரசின் இந்த செயல்பாட்டால் தற்போது குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. 1900வது வருடத்தில் தொடங்கி 1970ம் வருடம் வரை பிறப்பு - இறப்பு பதிவேடுகள் சார்பதிவகங்களிலும், 1971 முதல் 2000ம் வருடம் வரை வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு அலுவலகத்திலிருந்தும் பிறப்பு, இறப்பு பதிவேடுகள் மாற்றம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால், தகவல் அறியும் உரிமை சட்டம், வாரிசு சான்றிதழ் பெறுதல் போன்ற காரணங்களுக்காக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டிய நிலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஏற்படுகிறது.
அப்போது, அந்தந்த சார்பதிவகங்களில் இருந்து குறிப்பிட்ட ஆண்டின் பிறப்பு அல்லது இறப்பு பதிவேடுகளை வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் பெற்று செல்கின்றனர். ஆனால், அவை திரும்ப வழங்கப்படுவதில்லை. இதனால், 1970க்கு முந்தைய பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தேவைப்படுவோர் முதலில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கும், பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் செல்கின்றனர். இரண்டு இடங்களிலும் குறிப்பிட்ட ஆண்டின் பதிவேடு இல்லையெனில் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்றம் போன்ற இடங்களுக்கு அலைக்கழிக்கப் படுகின்றனர். ஒவ்வொரு, அலுவலகத்திலும் ரூ.10 நீதிமன்ற வில்லை ஒட்டி மனு செய்து குறிப்பிட்ட பிறப்பு, இறப்பு பதிவு இல்லை என்று அந்தந்த அலுவலகத்தில் சான்று பெற்றால் மட்டுமே அடுத்த அலுவலகத்தில் அதை தேடிப்பார்க்கின்றனர்.
இதனால், இச்சான்று கேட்டு விண்ணப்பம் செய்வோர் குறைந்தது மூன்று அல்லது நான்கு அலுவலகங்களுக்கு நடையாய் நடக்கின்றனர். இதனால், வெறுத்துப்போய் கோட்டாட்சியரிடம் மனு செய்து புதிதாக பதிவு செய்து சான்று பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதை தவிர்க்க அனைத்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்களையும், வட்டாட்சியர் அலுவலகத்தில் மட்டுமே பெறவேண்டும் என்ற நிலையை கொண்ட அவற்றை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். தற்போது, பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் அனைத்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்களும் கணினி மயமாக்கப்பட்டு விட்டன.
ஆனால், மாநகராட்சி போன்று ஆன்-லைனில் நாமே தேடிப்பார்த்து பிரிண்ட் எடுக்க முடியாத நிலை உள்ளது. அலுவலகத்திற்கு சென்று மனு செய்து 2 அல்லது 3 நாட்கள் காத்திருந்து செயல் அலுவலர் அல்லது ஆணையரின் கையொப்பம் பெற்ற பிறகே சான்றிதழினை பெறமுடிகிறது. ஆகவே, அனைத்து உள்ளாட்சி மன்றங்களில் உள்ள பிறப்பு - இறப்பு பதிவேடுகளை ஆன்லைன் மயமாக்க வேண்டும் அல்லது அவற்றை ஒரே இடத்தில் பெறும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
*1970க்கு முந்தைய பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தேவைப்படுவோர் முதலில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கும், பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் செல்கின்றனர். அங்கு பொதுமக்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர்.
