திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகள் கும்பாபிஷேக திருப்பணி: சிறப்பு பூஜையுடன் தொடங்கியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்க சன்னதிகள் கும்பாபிஷேக திருப்பணி ரூ.45.56 லட்சம் மதிப்பில் நடைபெறுகிறது. அதையொட்டி, சிறப்பு பூஜையுடன் திருப்பணிகள் நேற்று தொடங்கியது. திருவண்ணாமலையில் இறைவன் திருவடிவாக அமைந்திருக்கும் தீபமலையை வலம் வரும் பக்தர்கள், கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்க சன்னதிகளையும் வழிபடுவது வழக்கம். இந்திரன் முதலானோர் வழிபட்ட திருத்தலங்களாக அமைந்திருக்கிறது அஷ்ட லிங்க சன்னதிகள். தீபமலையின் எட்டு திசைகளிலும் இந்த சன்னதிகள் அமைந்திருக்கிறது. அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரத்திற்கு எதிரில் அமைந்துள்ள இந்திர லிங்கம் தொடங்கி, ஈசான்யம் அருகே அமைந்துள்ள ஈசான்ய லிங்கம் வரை அமைந்துள்ள அஷ்ட லிங்க சன்னதிகளும், அண்ணாமலையார் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் நிர்வகிக்கப்படுகிறது.

அது தவிர, பிற்காலத்தில் உருவான சூரிய லிங்க சன்னதியும், சந்திர லிங்க சன்னதியும் அஷ்ட லிங்கங்களில் இடம் பெறவில்லை. ஆனாலும், கிரிவலம் செல்லும் பக்தர்கள் சூரிய லிங்கத்தையும், சந்திர லிங்கத்தையும் வழிபடுவது தனிச்சிறப்பு. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆயிரம் திருக்கோயில்கள், ரூ.500 கோடி மதிப்பில்  திருப்பணி, பராமரிப்பு, புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நிறைவேற்றப்படும் என, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்க சன்னதிகள் மற்றும் சூரிய லிங்கம், சந்திர லிங்க சன்னதிகள் உள்பட 10 திருக்கோயில்களின் திருப்பணியை நிறைவேற்ற ரூ.45.56 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பணியில் உபயதாரர்களும் பங்களிப்பு செய்கின்றனர். அதையொட்டி, கும்பாபிஷேக திருப்பணியின் தொடக்கமாக நேற்று இந்திர லிங்க சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அஷ்ட லிங்க சன்னதிகள் மற்றும் சூரிய லிங்கம், சந்திர லிங்க சன்னதிகளின் திருப்பணிகள், கார்த்திகை தீபத்திருவிழாவுக்குள் முடிக்க திட்டமிட்டிருப்பதாக அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: