கடவுள் மறுப்பு வாசகம் விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் பெரியார் சிலைக்கு கீழ் இருக்கும் கடவுள் மறுப்பு வாசகம் தொடர்பான மனு மீது பதிலளிக்க தமிழகம் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த தெய்வநாயகம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழகத்தில் பெரியார் சிலைக்கு கீழே இருக்கும் கடவுள் மறுப்பு வாசகங்கள் பெரும்பாலான மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. இந்த வாசகம் நம் நாட்டின் மத சார்பின்மை கொள்கைக்கு எதிராகவும் உள்ளது. குறிப்பாக ஒருவரின் சுதந்திரமான நம்பிக்கைக்கு எதிராக இருக்கிறது. ஒரு மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்பதால் அதனை நீக்க வேண்டும். குறிப்பாக கோயில்கள் முன் இருப்பதையாவது உடனடியாக நீக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், ‘‘பெரியார் சிலை விவகாரத்தில் அதன் பராமரிப்புக்காக தமிழக அரசு தரப்பில் தொகை ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. எனவே பேச்சுரிமை, கருத்துரிமை என்ற அடிப்படையில் மனதை புண்படுத்தும் வாசகங்களை அனுமதிக்க கூடாது’’ என தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி எஸ்.கே.கவுல், ‘‘இந்த விவகாரத்தில் நாங்கள் இரு தரப்பு வாதங்களையும் கேட்க விரும்புறோம். அதனால் தமிழக அரசு இதுகுறித்து பதிலளிக்க வேண்டும்’’ என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Related Stories: