கலசபாக்கம் அடுத்த மட்டவெட்டு கோரை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும்-கிராம மக்கள் கோரிக்கை

கலசபாக்கம் : கலசபாக்கம் அடுத்த மட்டவெட்டு ஊராட்சியில், கோரை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஒன்றியம், மட்டவெட்டு ஊராட்சியில் மழைக்காலங்களில் கோரை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது காஞ்சி பகுதிக்கு கீழ்குப்பம், ராமசாமிபுரம், மேல்பாலூர், கீழ்பாலூர் வழியாக 10 கி.மீ. தூரம் சுற்றி கொண்டு செல்லும் நிலை உள்ளது.

இதனால், மழைக்காலங்களில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அதேபோல், இப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமெனில் காஞ்சிக்கு தான் செல்ல வேண்டும். பாலம் இல்லாததால் வெள்ளப்பெருக்கில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. உரிய நேரத்திற்கு சிகிச்சைக்கு செல்ல முடியாததால் உயிரிழக்க வேண்டிய சூழலும் உருவாகிறது. குறிப்பாக, கர்ப்பிணிகள் ஆற்று வெள்ளத்தை கடந்து மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் மட்டவெட்டு கிராமத்தில் கோரை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால், கிராம மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது பெய்த மழையில் கரையை கடக்க வாகன ஓட்டிகள் முயன்றபோது 5க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் இல்லை.

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நிலையான சொத்துக்களை உருவாக்கும் பொருட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இத்திட்டத்தின் மட்டவெட்டு ஊராட்சியில் கோரை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொண்டால் மட்டவெட்டு, கீழ்பாலூர், ராமசாமிபுரம் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயனடைவர்.

கோரையாறு புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ளது.

ஆனால், அதிக அளவில்  கலசபாக்கம் ஒன்றியத்தை சேர்ந்த பொதுமக்கள் தான் கோரையாற்றை கடந்து காஞ்சி செல்ல வேண்டும். இதனால் எந்த ஒன்றியத்தில் பணிகளை மேற்கொள்வது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.எனவே, கோரை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: