அதிமுக நிர்வாகிகள் அணிமாறிவிடக்கூடாது என்பதில் கவனம் சசிகலா சேலத்தில் பிரசாரம் செய்யும் நாளில் எடப்பாடியும் முகாம்: கட்சியினரிடையே பரபரப்பு

சேலம்: எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரான சேலம் வந்துள்ள நிலையில், சசிகலாவும் சேலத்தில் 2 நாள் பிரசாரம் செய்ய உள்ளதால் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து விட்டுவந்து, தற்போது அரசியலில் சசிகலா தீவிரம் காட்டிவருகிறார். அதிமுகவின் பொதுச்செயலாளர் நான் தான் என கூறிவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகிவிட்டார். கட்சி தன்னைவிட்டு போய்விடக்கூடாது என்பதில், ஓ.பன்னீர்செல்வமும் கோர்ட் படியேறி வருகிறார். இப்போது இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இந்நிலையில் சசிகலா பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் சென்று கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். ஆனால் சசிகலாவை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் கட்சிக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்றும் கூறிவருகிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் வரிந்து கட்டியுள்ளனர். இதனால் எடப்பாடி அணியினருக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சசிகலா, எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்ட திட்மிட்டுள்ளார்.

அதன்படி நாளை (திங்கள்) மாலை அவர் சேலம் வருகிறார். ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி ஆகிய இடங்களில் பேசுகிறார். மாலை 4 மணிக்கு 4 ரோடு அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆர்- ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர் தாதகாப்பட்டி, சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் பேசும் சசிகலா, சூரமங்கலம் உழவர் சந்தை பகுதியில் முதல்நாள் சுற்றுப்பயணத்தை முடிக்கிறார். இரவு சேலத்தில் தங்கும் அவர், செவ்வாய்க்கிழமை அரியானூர், சங்ககிரி வழியாக ஈரோட்டிற்கு செல்கிறார். இவரது சுற்றுப்பயணம் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சேலத்தில் இருந்து ஒரு நிர்வாகி கூட சசிகலா பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். சசிகலா சேலத்தில் முகாமிடும் நேரத்தில் தான் சேலத்தில் இருந்தால் யாரையும் அந்தப்பக்கம் சாய்ந்துவிடாமல் தடுக்கலாம் என முடிவு செய்து திருப்பதி சென்ற அவர் அங்கிருந்து நேற்று பகல் 2 மணிக்கு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். மாலையில் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இவரும்  சேலத்தில் 2 நாள் முகாமிட்டு கட்சி நிர்வாகிகள் திருமணத்தில் கலந்து கொள்கிறார். சசிகலா 12ம்தேதி சேலத்திலிருந்து புறப்பட்டு சென்றபிறகுதான் எடப்பாடி சென்னை செல்வார் என கூறப்படுகிறது.

Related Stories: