அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடி வந்தபோது காமராஜ், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் புறக்கணிப்பு: சசிகலாவுக்கு மறைமுக ஆதரவா?

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக முதன் முறையாக எடப்பாடி பழனிசாமி கட்சி தலைமை அலுவலகம் வந்தபோது சி.வி.சண்முகம், காமராஜ், விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், ஓ.எஸ்.மணியன், வளர்மதி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வரவில்லை. இவர்கள் மறைமுகமாக சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக எடப்பாடி அணிக்கு சந்தேகம் எழுந்துள்ளது.கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக சிறப்பு பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றமும், எடப்பாடி தலைமையில் நடந்த பொதுக்குழு செல்லும் என்று அறிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த நிலையில், இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி கடந்த 8ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து இடைக்கால பொதுச்செயலாளரக பதவியேற்றுக் கொண்டார். எடப்பாடி கட்சி அலுவலகம் வருகையையொட்டி வழிநெடுக அவருக்கு ஆட்டம், பாட்டம், மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சி தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்த எடப்பாடி, ‘‘ஓபிஎஸ் பச்சோந்தியை விட மோசமானவர். நேரத்துக்கு நேரம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார். அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டாலும் அதிமுக கட்சியில் அவரை சேர்க்க மாட்டோம்’’ என்று அதிரடியாக கூறினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினரும், ஓபிஎஸ் தீவிர ஆதரவாளருமான ஜெ.சி.டி.பிரபாகர் சென்னை, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு மனு அளித்தார். அதில், ‘‘ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சி தலைமை அலுவலகம் சென்று, கட்சி பணிகளை ஆற்றிட எந்தவித சட்ட தடையும் இல்லை.

எனவே எதிர்வரும் நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகம் செல்லும்போது அவரை வரவேற்க அதிகப்படியான தொண்டர்கள் கூடும் சூழ்நிலை உள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் கலவரம் செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். எனவே கட்சியின் ஒருங்கிணைப்பாளர், மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக தொண்டர்கள் வந்து செல்ல எந்தவித இடையூறும் இல்லாத வகையில் கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள எம்ஜிஆர் மாளிகைக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்று அதில் கூறி இருந்தார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை சென்னை மாநகர போலீசார் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கி வந்தால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க தயாராக இருப்பதாக கூறினர். அதேநேரம், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக முதன் முறையாக சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகம் வந்தபோது முன்னாள் அமைச்சர்களும் மூத்த நிர்வாகியுமான கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், கோகுல இந்திரா உள்ளிட்ட சில முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

அதேநேரம், மூத்த நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சர்களுமான சி.வி.சண்முகம், காமராஜ், விஜயபாஸ்கர், வளர்மதி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட சில அமைச்சர்கள் வராமல் புறக்கணித்து விட்டனர். அதிமுக கட்சி தலைமை அலுவலகம் சார்பில், கடந்த 6ம் தேதி எடப்பாடி பழனிசாமி 8ம் தேதி காலை 10.30 மணிக்கு கட்சி அலுவலகம் வருகிறார். அதனால் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள் என அனைவரும் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பையும் மீறி சில முன்னாள் அமைச்சர்கள் கட்சி தலைமை அலுவலகம் வராதது தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மறைமுகமாக சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும், அதனால் தான் கட்சி அலுவலகம் வரவில்லை என்று மூத்த நிர்வாகிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு உறுப்பினர்களில் 96 சதவீதம் பேர் ஆதரவு உள்ளது என்று கூறும் நிலையில் தற்போது ஒவ்வொருவராக பின்வாங்கி வருவது எடப்பாடி ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது வரை அவரது நடவடிக்கை நன்றாக இருந்தது. தற்போது, அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மூத்த நிர்வாகிகளை அவர் மதிக்காமல் நடந்து கொள்கிறார். 8ம் தேதி கட்சி அலுவலகத்தில் கூட கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை தன்னுடன் மேடையில் அமர வைக்காமல், எதிர் வரிசையில் உட்கார வைத்தார். இது அதிமுக கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் அதிமுக மூத்த நிர்வாகிகள் தற்போது தங்களது நிலையை மாற்றி வருகிறார்கள் என்றனர்.

Related Stories: