உத்திரமேரூர் அருகே சேறும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் கடும் அவதி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே சேறும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தார் சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேருர் அருகே பட்டாங்குளம் கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் வினோபா நகர் என்ற இருளர் குடியிருப்பும் உள்ளது. இங்கு, 34 இருளர் மற்றும் பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள்தான் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமங்களுக்கு செல்வதற்கு மண் சாலைதான் உள்ளது. அதுவும் முறையாக அமைக்காததால் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழை பெய்தால் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி விடும். இவ்வழியாக செல்லவே முடியாது. சில நேரங்களில் சேற்றில் சிக்கி கீழே விழுந்து காயமடையும் நிலையும் உள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் இந்த மண் சாலையில் வழக்கம் போல தண்ணீர் தேங்கியது.

இதனால் போக்குவரத்துக்கு லாக்கியற்ற நிலையில் சேறும் சகதியுமாக மாறி விட்டது. பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். எனவே இந்த சாலையை சீரமைத்து தரமான தார் சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: