ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் கடந்த ஒரு வாரத்தில் ரூ624 கோடிக்கு மது விற்பனை..!

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த ஒரு வாரத்தில் ரூ.624 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. கேரளாவில் பிற மாநிலங்களை விட மதுகுடிப்போர் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது. பண்டிகை காலங்களில் இங்கு வழக்கத்தை விட மது விற்பனை அதிகமாக இருக்கும். அதுவும் ஓணம் பண்டிகை காலத்தில் இந்த விற்பனை பல மடங்கு அதிகரிக்கும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக ஓணப்பண்டிகை கொண்டாடப்படவில்லை.

இதனால் மது விற்பனையும் குறைவாகவே இருந்தது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் ஓணப்பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அதோடு மது விற்பனையும் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியது. கேரளாவில் ஓணப்பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படும். இதில் முதல் 3 நாட்களிலேயே மாநிலம் முழுவதும் மது விற்பனை ரூ.300 கோடியை தாண்டியது.

ஒருவாரம் முடிந்த நிலையில் இந்த விற்பனை ரூ.624 கோடியாக உயர்ந்ததாக மதுபான விற்பனை கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதற்கு கேரளாவில் குடிமகன்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதும் ஒரு காரணமாகும். இது தொடர்பாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் தினசரி மது குடிப்போர் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்துவது போல இப்போது மது விற்பனை புதிய உச்சம் தொட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இது பற்றி கேரள மதுபான விற்பனை மைய அதிகாரிகள் கூறியதாவது: கேரளாவில் கடந்த ஆண்டு ரூ. 529 கோடிக்கு மது விற்பனை ஆனது. இந்த ஆண்டு கூடுதலாக ரூ.95 கோடி விற்பனை ஆகியுள்ளது. இதன்மூலம் மொத்த விற்பனை ரூ.624 கோடியாக உயர்ந்துள்ளது. கேரளாவில் கூடுதல் மதுபான கடைகள் திறக்கப்பட்டது மற்றும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதே இதற்கு காரணமாகும். மாநிலம் முழுவதும் நடந்த மது விற்பனையில் கொல்லம் ஆசிரம விற்பனை கடை முதலிடம் பிடித்துள்ளது.

இங்கு மட்டும் ஒரு கோடியே 5 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. இதுபோல திருவனந்தபுரம், இரிஞ்சாலகுடா, எர்ணாகுளம், கண்ணூர், பரகண்டி பகுதிகளில் உள்ள விற்பனை நிலையங்களிலும் ரூ. 1 கோடிக்கு மேல் மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: