வெள்ளவேடு ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு இயக்க பணிகள் திட்ட இயக்குநர் ஆய்வு

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நம்ம ஊரு சூப்பரு எனும் துாய்மைக்கான மக்கள் இயக்கம் ஆகஸ்ட் 15 கிராம சபைக் கூட்டங்களில்  அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 2 வரை நடைபெற உள்ளது. ஒன்றிணைவோம், பசுமையும் தூய்மையும் நமதாக்குவோம் என்ற முழக்கத்துடன் தொடங்கப்ட்ட இந்த மக்கள் இயக்கத்தின் நோக்கம் சமுதாயத்தின் அனைத்து பங்கேற்பாளர்களின் பங்களிப்புடன் பொது இடங்களில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்துத்துதல், பொதுக் கட்டிடங்களை தூய்மையாக பராமரித்தல், அனைத்து வீடுகளிலும் குப்பைகளை தரம் பிரித்தல், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளை தடை செய்தல் மாற்று பொருள் பயன்படுத்துதல், திரவக்கழிவு மேலாண்மை, சுத்தமான குடிநீர் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த முயற்சிகள், ஊட்டச்சத்து தோட்டங்கள் வளர்த்தல் மற்றும் பசுமை கிராமமாக மாற்ற மரக்கன்றுகள் நடுதல் ஆகிய முன்முயற்சிகளை உள்ளடக்கியதாகும்.

நம்ம ஊரு சூப்பரு எனும் துாய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை  திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், வெள்ளவேடு ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டு குப்பை மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கமளித்து வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்த ஆய்வின்போது தங்கள் பள்ளி, வீடுகள் மற்றும் சுற்றுப் புறத்தை துாய்மையாக பராமரித்தல் குறித்த பண்புகளை கற்றுத் தர வேண்டியதன் அவசியம்  மற்றும் வீடுகளிளேயே மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து தூய்மை காவலருக்கு வழங்குதலின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கோ.துர்கா கோபிநாத், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.சிவக்குமார், உதவி பொறியாளர்கள் முத்துலட்சுமி, பரந்தாமன், பணி மேற்பார்வையாளர் குமரவேல், தூய்மை பாரத திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கோ.சிவானந்தம், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர்  எஸ்.தேன்மொழி நன்றி கூறினார்.

Related Stories: