மேட்டுப்பாளையம் அருகே கன்று குட்டியை தாக்கிக் கொன்ற சிறுத்தை-கேமரா பொருத்தி கண்காணிக்க வனத்துறை முடிவு

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்று குட்டியை சிறுத்தை தாக்கி கொன்றது. கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த வெள்ளியங்காடு முத்துக்கல்லூரை  சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(55). இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலத்தில் மானாவாரி பயிர்களை விவசாயம் செய்து வருகிறார். மேலும், 4 பசு மாடுகளையும் வளர்த்து பால் வியாபாரமும் செய்து வருகிறார்.தோட்டத்தின் அருகிலேயே உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல மாடுகளுக்கு கொட்டகையில் தீவனத்தை வைத்து விட்டு தூங்கச் சென்றார்.

இந்த நிலையில் நள்ளிரவில் புகுந்த சிறுத்தை அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியை கடித்து கொன்று சாப்பிட்டு சென்றது. நேற்று காலையில் வந்து பார்த்த போது தான் கிருஷ்ணசாமிக்கு இது தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்து காரமடை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

 இதையடுத்து சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கி கொன்றது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

கேமராவில் பதிவாகும் காட்சிகளை வைத்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். சம்பவ இடத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வேணுகோபால் பார்வையிட்டார்.அப்பகுதியினர் கூறுகையில், ‘வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தையை பிடித்து அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்’ என்றனர்.

Related Stories: