உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என மாணவர்களுக்கு வழிகாட்ட முகாம்கள் நடத்த வேண்டும்: பள்ளி கல்வித்துறை உத்தரவு

சென்னை: பிளஸ் 2 முடித்த மாணவர்கள், உயர்கல்வியில் சேர்ந்து படிக்க வசதியாக மாணவர்கள், பெற்றோருக்கு வழிகாட்ட முகாம்கள் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர உள்ளனர். எனவே அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2021-2022ம் ஆண்டில் உயர் கல்வி படிக்க இருக்கும் மாணவர்களையும் அவர் தம் பெற்றோரையும் 7ம் தேதி முதல் 9ம் வரை பள்ளிகளுக்கு வரவழைத்து உயர்கல்வி தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள்  வழங்க வேண்டும். உயர்கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி பெற்ற முதன்மைப் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் தகுந்த ஆலோனைகள் மற்றும் பிற வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு தகவல்கள் கொடுத்து உதவ வேண்டும்.

மாணவர்கள் உயர்கல்வி மற்றும் போட்டித் தேர்வு முடிவுகள் குறித்து ஏதாவது கவலையோ, பதற்றமோ அல்லது குழப்பமான  மனநிலையில் இருக்கிறார் என்று தெரிந்தால் 14417 மற்றும் 104 உதவி எண்களுக்கு அல்லது முதன்மை பயிற்சியாளர் இணைப்பு கொடுத்து தொடர்பு கொள்ள செய்தல் வேண்டும். பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக செயல்பட்டு  வரும் உதவி எண் 14417 என்ற எண்ணுக்கு மாணவர்களிடம் இருந்து வரும் தகவல்களில் கூடுதல் விவரங்கள், நேரடி உதவிகள் தேவைப்பட்டால் அந்தந்த மாவட்டத்தில் உள்ள முதன்மைப் பயிற்சியாளர்களுடன் மாணவர்களை பேச வைக்க வேண்டும். அதனால் 9ம் தேதி வரை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முதன்மைப் பயிற்சியாளர்கள் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: