வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் ரூ.125.28 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் ரூ.125.28 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் 125 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 11 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், 4 ஆய்வகக் கூடங்கள், தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மையம், வேளாண் வணிக மையங்கள், வேளாண்மைப் பொறியியல் பயிற்சி மையக் கட்டடம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பல்நோக்கு அரங்கம் உள்ளிட்ட கட்டடங்கள் ஆகியவற்றை நேற்று திறந்து வைத்தார்.

வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் 1.22 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் - காட்டாங்குளத்தூர், திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் உள்பட பல்வேறு இடங்களில் 22.80 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 11 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் கடலூரில் மண் ஆய்வுக்கூடம், மதுரை மற்றும் பரமக்குடியில் உரக்கட்டுப்பாடு ஆய்வுக்கூடங்கள், கோவில்பட்டியில் பூச்சிக்கொல்லி ஆய்வுக்கூடம் என 3 கோடி ரூபாய் செலவில் 4 ஆய்வுக்கூடங்கள் கட்டப்பட்டுள்ளன.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 95 லட்சம், வேளாண் வணிகத்துறையின் சார்பில் 28 கோடியே 75 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் பல்வேறு திட்டப்பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 125 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் இறையன்பு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: