சித்த மருத்துவ பல்கலை. அமைக்க மாதவரத்தில் இடம் தேர்வு: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

டெல்லி: சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க மாதவரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,  சித்த மருத்துவம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழ்நாட்டில் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் போன்ற அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனம் அமைக்கப்படும். மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்கவும் ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழ்நாட்டில் மேலும் 32 மாவட்டங்களில் செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க அனுமதி கோரியுள்ளோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டிய அவசியத்தை ஒன்றிய அரசிடம் பட்டியலிட்டுள்ளோம்.

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணவும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் 100 சித்தா, ஆயுஷ் நலவாழ்வு மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 50 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது. பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, காஞ்சிபுரம், மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரிகள் இல்லை.  6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Stories: