நதிநீர் பங்கீடு, சட்டம் ஒழுங்கு பற்றி தென் மாநில முதல்வர்களுடன் அமித்ஷா ஆலோசனை: திருவனந்தபுரத்தில் தொடங்கிய கூட்டத்தில் ஸ்டாலின் உள்பட பலர் பங்கேற்பு

திருவனந்தபுரம்: நதி நீர் பங்கீடு, சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்துவதற்காக திருவனந்தபுரத்தில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் இன்று காலை தொடங்கியது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட தென் மாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். தென்மண்டல கவுன்சில் 30 வது கூட்டம் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திருவனந்தபுரம் வந்தார். விமான நிலையத்தில் கேரள மாநில திமுக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் திருவனந்தபுரம் கோவளத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு மு.க.ஸ்டாலின் சென்றார்.

மாலையில் கோவளம் அரண்மனையில் வைத்து கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் மு.க. ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முல்லைப் பெரியாறு, சிறுவாணி உட்பட நதிநீர் பிரச்சினைகள் குறித்து தலைமைச் செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் முதல்வர்கள் இடையே ஆலோசனை கூட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இரு மாநில முதல்வர்களுக்கிடையே நல்ல புரிந்துணர்வு உள்ளதால் கூட்டம் சுமூகமாக நடந்தது.  இதன் பின்னர் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கதகளி, மோகினி ஆட்டம் உள்பட கேரளாவின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா முதல்வர்  பசவராஜ் பொம்மை ஆகியோர் ரசித்துப் பார்த்தனர். இந்நிலையில் தென் மண்டல கவுன்சில் கூட்டம் இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கியது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டத்தை தொடங்கி வைத்தார். கூட்டத்தில் தென் மாநிலங்கள் இடையே உள்ள நதிநீர் பங்கீடு, சட்டம் ஒழுங்கு, தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய தென்மாநில உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த முறை நடந்த கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டார். இந்த முறை முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரடியாக கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 7 மணிக்கு சென்னை திரும்புகிறார்.

Related Stories: