கலெக்டர்கள் ஒப்புதல் வழங்கி உள்ள 3,273 ஏக்கர் நிலங்களில் விரைவில் சூரிய மின் உற்பத்தி பூங்கா: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை:  மாவட்ட கலெக்டர்கள் ஒப்புதல் வழங்கி உள்ள 3,273 ஏக்கர் நிலங்களில் சூரிய மின் உற்பத்தி  பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, எரிசக்தித் துறை சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும் தமிழகத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை மற்றும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை குறித்து மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆய்வினை காணொலி மூலம் மேற்கொண்டார்.  

இந்த கூட்டத்தில்,  மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்  கழகத் தலைவர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் சிவலிங்கராஜன், தலைமைப்  பொறியாளர்கள், மற்றும் உயர்  அதிகாரிகள் பங்கேற்றனர்.அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள்,  அனைத்து மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் ஆகியோர் காணொலி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர்,  அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: தொடர்ந்து பெய்யக் கூடிய மழையில் சீரான மின் விநியோகத்திற்காக  ஏறத்தாழ 1,40,000 மின் கம்பங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. அதேபோல், மின்கம்பிகளை பொருத்தவரைக்கும் 9,500 கி.மீ மின்கம்பிகள் தயாராக இருக்கின்றன.  சூரிய மின் உற்பத்தி  பூங்கா அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்வதற்கு ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் அனுப்பப்பட்டு அதில் 3,273 ஏக்கர்  அரசு நிலங்கள் மின்வாரியத்திற்கு வழங்குவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் ஒப்புதலை வழங்கி இருக்கின்றார்கள்.

3,273 ஏக்கரும் ஆய்வு செய்யப்பட்டு அவ்விடத்தில் சூரிய மின் உற்பத்திக்கான பூங்கா அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா என்பது கண்டறியப்பட்டு அந்த இடங்களை மின் வாரியத்தின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், அந்த பணிகளை விரைவாக செய்து முடித்திட வேண்டும் என்றும் எடுத்துச் சொல்லப்பட்டிருகின்றன.  டிசம்பர் மாதம் வடசென்னை அனல்மின் நிலையத்தினுடைய நிலை-3 பணிகள் முடிக்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படும். அதற்கான பணிகளும் விரைவுப்படுத்தப் பட்டிருக்கின்றன. சென்னையைப் பொறுத்தவரைக்கும் 5 டிவிசன்களில் யுஜி கேபிள் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.  மீதம் இருக்ககூடிய 7 டிவிசன்களில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்ட இறுதி நிலைக்கு வந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

மேலும், மதுரையில் புதிய மின்மாற்றி எண்ணெய்  ஆய்வகம் ஒன்று நிறுவுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விரைவில்  செயலாக்கத்திற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் முன்னுரிமை அடிப்படையில் அனைத்து  மருத்துவமனைகள் மற்றும் குடிநீர் இணைப்புகளுக்கு உடனடியாக  மின் இணைப்பு  வழங்க வேண்டும். கன மழையின் போது எடுக்கப்பட வேண்டிய  நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து உடனடியாக  அனைவருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Related Stories: