உற்சாகத்தில் ஈபிஎஸ்..சோகத்தில் ஓ.பி.எஸ்: ஜூன் 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் அதிரடி..!!

சென்னை: ஜூன் 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு செல்லாது, ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல்கள் விஜய் நாராயண், சி.எஸ். வைத்தியநாதன், அரிமா சுந்தரம், எஸ்.ஆர்.ராஜகோபால், நர்மதா சம்பத் ஆகியோர் ஆஜரானார்கள். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குருகிருஷ்ண குமார், அரவிந்த் பாண்டியன், சி.திருமாறன், ராஜலட்சுமி ஆகியோர் ஆஜரானார்கள்.  அனைத்து தரப்பினரும் தலா ஒருமணிநேரம் வாதம் செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன்,  வாதிடும்போது, ‘உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அப்பால் தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இதே வழக்கில் ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் யூகங்களின் அடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்’ என்று வாதிட்டார். அவரை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிடும்போது, ‘ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவது என்பது இனி நடக்காது. தனி நீதிபதி உத்தரவால் கட்சி  செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுவிடும். எனவே, தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் வாதிடும்போது, ‘‘அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுகதான். தலைமைக்கழகத்தின் பெயரில் தான் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதே தவிர, ஒருங்கிணைப்பாளரோ அல்லது இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல. கட்சியின் விதிகள் மீறப்பட்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடத்தப்பட்டுள்ளது’’ என்று வாதிட்டனர்.  

பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில்  வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி, அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடத்துவது என்று செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியபிறகு பொதுக்குழு ஒப்புதல் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இந்நிலையில், இந்த மேல் முறையீட்டு வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தரமோகன் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பழனிசாமி தரப்பு வாதம்:

நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பில் பல்வேறு தவறுகள் இருப்பதாக பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரம் பெற்றவரால் கூட்டப்படவில்லை என்ற நீதிபதி கருத்து தவறு. 1.5 கோடி உறுப்பினர்கள் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலிப்பார்களா? என்பது ஊடகத்தின் கேள்வி. ஜூன் 23க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் தரப்பு மனுவில் கோரவில்லை. பன்னீர்செல்வம் தரப்பு கோராமலே நீதிபதி நிவாரணம் வழங்கி இருப்பது அசாதாரணமானது.

கட்சி விவரங்களை பொறுத்தவரை பொதுக்குழு முடிவே இறுதியானது என்றும் பழனிசாமி தரப்பு வாதிட்டது. கட்சியின் அடிப்படை தொண்டர்கள் கருத்துக்களை பெறவில்லை என தனிநீதிபதி தீர்ப்பளித்தது தவறு. ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து செயல்பட முன்வரமாட்டார்கள் என்றும் வாழக்கறிஞர் வாதிட்டார். தனி நீதிபதியின் தீர்ப்பால் கட்சி நடவடிக்கைகள் ஸ்தம்பித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. உள்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையில் உள்ள தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம்:

பொதுக்குழு உறுப்பினர்கள் மேலானவர்கள் என்ற பழனிசாமி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரே கட்சி அதிமுகதான் என ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன் வாதிட்டனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை என்றும் வாதிட்டனர். ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தான் கட்சி விதிப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும். தலைமை கழகத்தின் பெயரில் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி ஜூலை 11ல் கூட்டியது செல்லாது. அதிமுக ஒருங்கிணைப்பாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுப்பார்கள். ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கு பொதுக்குழு ஒப்புதல் பெறாவிட்டால் அது காலாவதியாகாது என்று தெரிவிக்கப்பட்டது.

தனி நீதிபதி உத்தரவு ரத்து:

வாதங்களை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தனர். ஜூன் 23க்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என தனிநீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டது ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்ப்பின் மூலம் ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி தரப்பு:

ஒற்றைத் தலைமை என்ற அதிமுக தொண்டர்களின் நோக்கத்தை நீதிமன்றம் ஏற்றுள்ளது. சட்டவிதிகளின்படியே ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்றுள்ளது.

பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாட்டம்:

நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்ததால் சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரு அமர்வு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பால் பழனிசாமி அதிமுக இடைக்கால பொது செயலாளர் ஆனதும்  செல்லும்.

Related Stories: