2 மாதங்களுக்கு பிறகு 3 டிஎம்சி கொள்ளளவை எட்டியது புழல் ஏரி: கடல்போல காட்சி அளிக்கிறது

சென்னை: புழல் ஏரி இரண்டு மாதங்களுக்கு பிறகு,  3 டிஎம்சி கொள்ளளவை எட்டி கடல்போல காட்சி அளிக்கிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 3 டிஎம்சி நீர் இருப்பை கொண்டுள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நேற்று காலை நிலவரப்படி 3002 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவில் 90.96% தண்ணீர் தற்போது நிறைந்துள்ளது. மழைநீர் மட்டுமல்லாது, பூண்டி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், வினாடிக்கு 256 கனஅடிநீர் புழல் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக, ஏரியில் இருந்து 160 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக, கடந்த ஓராண்டாகவே புழல் ஏரியில் நீர் இருப்பு 80% அதிகமாகவே நீடித்து வந்தது. ஏரியில் நீர்மட்டம் சற்று சரிந்து வந்த நிலையில், மீண்டும் 3 டிஎம்சி கொள்ளளவை எட்டியுள்ளது. ஏறக்குறைய முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்ற வாய்ப்புகள் உள்ளதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: