விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அமைதியான முறையில் வழிபாடுகள் மேற்கொள்ள வேண்டும்: காவல்துறை அறிவுறுத்தல்..!

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை பெருநகரில் அமைதியான முறையில் வழிபாடுகள் மேற்கொள்ளவும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்; விநாயகர் சதுர்த்தியை (31.08.2022) முன்னிட்டு, சென்னை பெருநகரில், விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும், வழிபாடுகள் செய்வதற்கும் பின்னர் அவற்றை நீர் நிலைகளில் கரைப்பதற்கும், மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தல்படியும், தீயணைப்புத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியினரின் தடையில்லா சான்றுகளுடன் காவல்துறை அறிவித்த கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலைகளை நிறுவ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் ஆவடி, தாம்பரம் காவல் ஆணையாளர்கள் ஆகியோரின் உத்தரவின்பேரில், கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில், சென்னை பெருநகர காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு, அமைதியான முறையில் வழிபாடுகள் செய்யவும், பின்னர் காவல்துறை அறிவிக்கப்பட்ட நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும், ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளதன்பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் 1,352 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆவடி காவல் சரகத்தில் 503 சிலைகளும், தாம்பரம் காவல் சரகத்தில் 699 சிலைகளும் என மொத்தம் 2,554 சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   

விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்வதற்கான முக்கிய கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள்

* விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

* தீயணைப்புத்துறை, மின்வாரியம், ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.

* இவைகளை பெற்று, சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க உறுதியளித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

* நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்திலிருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது.

* தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் முக்கிய கட்டுப்பாடான, விநாயகர் சிலைகள் தூய களிமண்ணால் தயாரிக்கப்பட வேண்டும். வண்ணப்பூச்சு செய்ய வேண்டுமெனில், தண்ணீரில் கரையக்கூடிய நச்சுத்தன்மையற்ற இயற்கை வண்ண சாயங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். பிளாஸ்ட் ஆப் பாரிஸ் மற்றும் தடை செய்யப்பட்ட இரசாயணத்தால் ஆன வண்ணப்பூச்சுகள் தடை செய்யப்பட்டுள்ளது.

* ஒலிப்பெருக்கி உரிமமானது, பூஜையின்போது, காலையில் 2 மணி நேரங்கள் மற்றும் மாலையில் 2 மணி நேரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி தடை செய்யப்பட்டுள்ளது.

* பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்.

* மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது.

* சிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு தன்னார்வலர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.

* நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் எவ்வித அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவான பலகைகள்/ விளம்பரத்தட்டிகள் வைக்கக்கூடாது.

* தீ பாதுகாப்பு விதிமுறைகளும், விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும், மின்சார சாதனங்கள், பந்தல்கள் அவ்வப்போது கண்காணித்து, விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

* விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும்.

* விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை. மேற்படி குறிப்பிட்ட முக்கிய கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடு செய்ய, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், அமைதியான முறையிலும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் வழிபாடுகள் மேற்கொள்ளவும், சிலைகளை கரைக்கவும் சென்னை பெருநகரில் 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், 2,000 ஊர்க்காவல் படையினர்  கொண்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆவடியில் 3,500 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் 300 ஊர்க்காவல் படையினர், தாம்பரத்தில் 3,300 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் 350 ஊர்க்காவல் படையினர் என மொத்தம்  21,800 காவல் அதிகாரிகள் ஆளிநர்கள், 2,650 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும், விநாயகர் சிலைகளை நிறுவியுள்ள இடங்களில் காவல் ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்தும், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அவ்வப்போது ரோந்து சுற்றி கண்காணித்தும் வரப்படும். இது தவிர அனைத்து விநாயகர் சிலைகள் நிறுவியுள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.    விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் மூலம் மட்டுமே விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, அனுமதிக்கப்பட்ட சிலை கரைக்கும் இடங்களில் கரைக்கப்பட வேண்டும்.

சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்படும், சிலைகளை கரைப்பதற்கு Conveyar Belt. கிரேன்கள், படகுகள் உதவி கொண்டு சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிலை கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள். மேலும், அங்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலம் கண்காணித்தும், குதிரைப்படைகள் மற்றும் All Terrain Vehicle (Beach Buggies) மூலம் தீவிர ரோந்து பணிகள் மேற்கொண்டு கண்காணித்தும் குற்ற நிகழ்வுகள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணிக்கப்படும்.

விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் மற்றும் வழித்தடங்கள்

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட 1.சீனிவாசபுரம், பட்டிணப்பாக்கம், 2.பல்கலைநகர், நீலாங்கரை, 3.காசிமேடு மீன்பிடி துறைமுகம், 4.திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகரில் நிறுவியுள்ள விநாயகர் சிலைகளை மேற்படி 4 இடங்களில் கரைக்க சென்னையில் 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு, அவ்வழியே விநாயகர் சிலைகளை கொண்டு சென்று சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டு அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்பேரில், சென்னை, நுங்கம்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, ஆர்.கே.நகர், புளியந்தோப்பு, பட்டாளம், சௌகார்பேட்டை, அயனாவரம் ஆகிய இடங்களில் மற்றும் இதன் சுற்றுப்புற இடங்களில் உள்ள விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக சென்று, பட்டிணப்பாக்கம், சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதே போல, அடையாறு, திருவான்மியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், நீலாங்கரை பல்கலை நகர் கடலிலும், வடசென்னை பகுதியான தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, இராயபுரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் காசிமேடு மீன்பிடிதுறைமுகம் கடலிலும் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட விநாயகர் சிலைகள்    

மேலும், தாம்பரம் காவல் ஆணையரகத்திற்குட்பட்ட மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், மீனம்பாக்கம், குன்றத்தூர், அனகாபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் 4 குறிப்பிட்ட வழித்தடங்கள் மூலம் வேளச்சேரி விஜயநகரம் சந்திப்பை அடைந்து அங்கிருந்து திருவான்மியூர் வழியாக கொண்டு செல்லப்பட்டு, நீலாங்கரை பல்கலை நகர் கடலில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 அதே போல ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி, அம்பத்தூர், கொரட்டூரில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், பாடி மேம்பாலம் வழியாக, நியூ ஆவடி சாலை, அண்ணா வளைவு, நெல்சன் மாணிக்கம் ரோடு வழியாக, வள்ளுவர் கோட்டம் சந்திப்பு வரையிலும், பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், போரூர் மற்றும் சுற்றுப்புறங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் விருகம்பாக்கம், வடபழனி வழியாக வள்ளுவர் கோட்டம் வரையிலும், திருவேற்காடு, வானகரம், மதுரவாயல் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கோயம்பேடு அடைந்து, அங்கிருந்து வள்ளுவர் கோட்டம் வரையிலும் சென்று.

பின்னர் வள்ளுவர் கோட்டத்திலிருந்து ராதாகிருஷ்ணன் சாலை, காந்தி சிலை வழியாக சீனிவாசபுரம், பட்டிணப்பாக்கம் கடற்கரைக்கு செல்லும். இதே போல வடசென்னை பகுதியை அடுத்த மணலி, மாத்தூர், காரனோடை, பாடியநல்லூர், செங்குன்றம், புழல் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகள் மூலக்கடை சந்திப்பு, வியாசர்பாடி, பேசின் பாலம், மின்ட் சந்திப்பு, ராஜாஜி சாலை, முத்துசாமி பாலம் வழியாக பட்டிணப்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு 5 வழித்தடங்கள் மூலம் பட்டிணப்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் அமைதியான முறையில் வழிபாடுகள் செய்யவும், பொது இடங்களில் அனுமதியுடன் நிறுவப்பட்ட விநாயகர் சிலைகளை, காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து அமைதியான முறையில் வழிபாடுகள் செய்யவும், காவல்துறை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை அமைதியான முறையில் ஊர்வலமாக கொண்டு சென்று, அனுமதிக்கப்பட்ட கரைப்பிடங்களில் கரைக்கவும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், வழிபாடு இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் சிலைகளை கரைக்கும் இடங்களில், காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை மற்றும் ஆவடி, தாம்பரம்  ஆணையரகம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: