செலவினம் குறைப்பு, கூடுதல் வரி விதிப்புடன் இலங்கையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்; போராட்டம் நடத்தியவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

கொழும்பு: இலங்கையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பதற்றம் ஏற்பட்டது. வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், மக்களின் ெதாடர் போராட்டங்களால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இந்நிலையில், நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பொறுப்பையும் வகிக்கும் ரணில் விக்ரமசிங்கே நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘நாட்டின் பொருளாதாரத்தை மீட்க ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியத்தின் கடனுதவி பெறுவதற்கான பேச்சு இறுதி கட்டத்தில் உள்ளது. விரைவில் பொருளாதார மீட்பு திட்டம் உறுதி செய்யப்படும்.

இதற்கிடையே பல நாடுகளிடம் இருந்து வாங்கிய கடன்களை திருப்பி செலுத்துவதை மாற்றி அமைப்பது தொடர்பாகவும் அந்த நாடுகளுடன் பேச்சு நடந்து வருகிறது. மிக விரைவில் நாடு பழைய பொருளாதார நிலைக்கு திரும்பும்’ என்றார். இதற்கிடையே இலங்கையில் நடந்த போராட்டத்தின் போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் போராட்டக்காரர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக்கோரியும், கைது செய்யப்பட்டோரை விடுவிக்கக் கோரியும் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த பேரணியை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் துரத்திச் சென்று விரட்டியடித்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அப்போது நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் 12 உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தனர். அதிபர் ரணில் விக்ரமசிங்கேவால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரான எம்பி சுமந்திரன் கூறுகையில், ‘இந்த பட்ஜெட் செலவினங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதல் வரி விதிப்பால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவர்’ என்றார்.

Related Stories: