கோவிட் தொற்று காலத்தில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்றிய சமூக ஆர்வலர்களுக்கு மாமன்ற உறுப்பினர்களின் தலைமையில் பாராட்டு

சென்னை: “நம்ம சென்னை, நம்ம பெருமை” என்ற உணர்வுடன்  கொண்டாடப்பட்ட சென்னை தினத்தின் தொடர்ச்சியாக  கோவிட் தொற்று காலத்தில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்றிய சமூக ஆர்வலர்களுக்கு மாமன்ற உறுப்பினர்களின் தலைமையில் பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னைப் பட்டினம் 1639-ம் ஆண்டு முதல் தற்பொழுது வரை 383 ஆண்டுகளில் சென்னை மாநகரமாக பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  

1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் நாள் மெட்ராசாக உருவான நம்முடைய சென்னையை கொண்டாடும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இந்த வருடம் ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து சென்னை தினம்” பெசன்ட் நகர், எலியட்ஸ் சாலையில் பல்வேறு  பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.

சென்னை தினக் கொண்டாட்டத்தின்போது மேயர் மாமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில், சென்னை தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையிலும், மாநகராட்சி பூங்காக்களை பொதுமக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும் தங்கள் பகுதிகளில் உள்ள பூங்காக்களில் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தவும், கோவிட் தொற்று, மழை வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்ட காலங்களில் மாநகராட்சியுடன் இணைந்து தன்னார்வத்துடன் சமூக பங்காற்றிய சமூக ஆர்வலர்களை பாராட்டி அவர்களின் செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கவும் அறிவுறுத்தினார்கள்.

அதன் அடிப்படையில், சென்னை பாலின நிகர் மேம்பாட்டு ஆய்வகமானது மேயர் அறிவுறுத்தல்களை செயல்படுத்தும் விதமாக, “சென்னைவாசிகளின் சேவையை அங்கீகரிக்கும் விழா” என்ற நிகழ்ச்சியை மாநகராட்சி பூங்காக்களில் சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினர்களின் தலைமையில்  நடத்தி வருகிறது. ஆகஸ்ட் மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வார்டு-41ல் உள்ள நேரு நகர் பூங்காவில் தண்டையார்பேட்டை மண்டலக்குழுத் தலைவர் நேதாஜி யு. கணேசன் மற்றும் மாமன்ற உறுப்பினர் விமலா தலைமையிலும், வார்டு-65, பூம்புகார் நகர் மாநகராட்சி பூங்காவில் மாமன்ற உறுப்பினர் சாரதா தலைமையிலும், வார்டு-77, புளியந்தோப்பு அம்மா பூங்காவில் நியமனக் குழு உறுப்பினர் சொ.வேலு மற்றும் மாமன்ற உறுப்பினர் சுமதி தலைமையிலும், வார்டு-92, முகப்பேர் கிழக்கு பூங்காவில் மாமன்ற உறுப்பினர் திலகர் தலைமையிலும் சென்னைவாசிகளின் சேவையை அங்கீகரிக்கும் விழா நடைபெற்றது.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு தன்னலமற்ற சேவையாற்றிய 94 தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு  நிறுவன அமைப்புகளுக்கு மாமன்ற உறுப்பினர்களின் தலைமையில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சிகளின் போது, பூங்காக்களில் பொதுமக்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.  மேலும், தன்னார்வலர்கள் கோவிட் பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு ஆற்றிய சேவைகள் குறித்து தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பிப்ரவரி 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பாலின நிகர் மேம்பாட்டு ஆய்வகம் பொது இடங்களில் மகளிர் பாதுகாப்புடன் சென்று வர பல்வேறு துறைகளுடன் இணைந்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது.  

அந்த வகையில் “சென்னைவாசிகளின் சேவையை அங்கீகரிக்கும் விழா” நிகழ்ச்சியின் வாயிலாக பூங்காக்களில் மகளிரின் பயன்பாட்டினை ஊக்கப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பூங்காக்களில் பொதுமக்களின் பயன்பாடு எந்த அளவில் உள்ளது மற்றும் அங்கு பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் குறித்து அறிந்து கொள்ளும் விதமாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் Parks survey இணைப்பின் மூலம் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.  இந்த இணைப்பை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவேற்றம் செய்யலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: