மாணவி பாலியல் வழக்கில் 4 திருமணம் செய்த பள்ளி ஊழியரும் சிக்கினார்: சேத்துப்பட்டில் போலீஸ் குவிப்பு

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே யுகேஜி மாணவி பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டது தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியர் கைதான நிலையில், 4 திருமணம் செய்த அப்பள்ளியின் வாகன போக்குவரத்து மேலாளரும் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கெங்கைசூடாமணி கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் யுகேஜி படிக்கும் 4 வயது சிறுமி பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக பள்ளி தாளாளரின் கணவரும், உலகம்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியருமான காமராஜை திருச்செந்தூர் அடுத்த எட்டையபுரம் பகுதியில் கடந்த 27ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.மேலும் இப்பள்ளியின் வாகன போக்குவரத்து மேலாளரான கார்த்தீபன்(50) என்பவரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இவர் பெரணமல்லூர் ஒன்றியம் கெங்காபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவருக்கு 4 மனைவிகள். அனைவரும் பிரிந்து சென்றுவிட்டனர். பாலியல் வன்கொடுமைக்கு கார்த்தீபனும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரிய வந்ததால் அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: