தாய்லாந்திலிருந்து கடத்தி வந்த 2 அரியவகை ஆப்பிரிக்க குரங்கு குட்டிகள்: அட்டைபெட்டியில் அடைத்ததால் உயிரிழப்பு

மீனம்பாக்கம்: தாய்லாந்திலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட இறந்துபோன 2 அரியவகை ஆப்பிரிக்க குரங்கு குட்டிகளை செங்கல்பட்டு, தனியார் தொழிற்சாலை பாய்லர் தீயில் எரித்து அழித்தனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து, தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு பயணி பிளாஸ்டிக் கூடையுடன் வந்திருந்தார். அவரை நிறுத்தி கூடையை  சோதனையிட்டனர். கூடைக்குள், ஆப்பிரிக்க நாட்டில் உள்ள 2 அரிய வகை குரங்கு குட்டிகள், மயங்கிய நிலையில் இருந்தன. இதையடுத்து ராமநாதபுரம் பயணியிடம்  விசாரணை நடத்தினர்.

வெளிநாடுகளிலிருந்து விலங்குகளை கொண்டு வருபவர், அந்த விலங்குகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, நோய் கிருமிகள் இல்லை என்பதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அதுபோல சர்வதேச வனவிலங்குத்துறை மற்றும் இந்திய வனத்துறையின் அனுமதி சான்று பெறவேண்டும். ஆனால், இதேபோன்ற எந்த சான்றும் இல்லாததால், இந்த இரண்டு ஆப்பிரிக்க குரங்கு குட்டிகளையும், மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கே திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்நிலையில் விலங்குகளை கூடைக்குள் அடைத்து வைத்துக்கொண்டு வந்தவர், குரங்கு குட்டிகள் சுவாசிக்க காற்று வசதி செய்யாததால், அந்த குரங்கு குட்டிகள் மிகவும் சோர்வாக மயங்கிய நிலையில் இருந்தன. அதோடு சிறிதுநேரத்தில் அந்த 2 குரங்கு குட்டிகளும் இறந்துவிட்டன.

இதையடுத்து இறந்த குரங்கு குட்டிகளை, மீண்டும் வந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியாததால், அடுத்து என்ன செய்வது என்று யோசித்தனர். பின்னர் உயர் அதிகாரிகளிடம், சுங்கத்துறையினர் ஆலோசனை நடத்தினர்.  அதன்பின்பு செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகில் சுங்கத்துறையினர் போதைப் பொருட்களை அழிப்பதற்கான, தனியார் பாய்லர் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த இறந்த இரண்டு குரங்கு குட்டிகளும் மருத்துவ பாதுகாப்புடன், அங்கு எடுத்துச்சென்று, அந்த தொழிற்சாலை பாய்லர், தீயில் போட்டு எரித்து அழித்தனர். அதோடு வெளிநாட்டிலிருந்து, முறையான அனுமதியின்றி அரியவவகை ஆப்பிரிக்கா நாட்டு குரங்கு குட்டிகளை, சட்ட விரோதமாக கடத்தி வந்த ராமநாதபுரம் பயணியை பிடித்து மேலும் விசாரணை செய்கின்றனர். அவர் மீது குரங்கு குட்டி இறப்பிற்கு காரணமாக இருந்தது, முறையான அனுமதியின்றி, சட்டவிரோதமாக குரங்கு குட்டிகளை கடத்தி வந்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக சுங்கத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வ செய்தி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: