சென்னை திரு.வி.க.நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு.!

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0, ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, மூலதன நிதி மற்றும் வெள்ளத் தடுப்பு சிறப்பு நிதி போன்ற பல்வேறு நிதி ஆதாரங்களின் மூலம் ரூ.4,070 கோடி மதிப்பீட்டில் 1,033 கீ.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதனடிப்படையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பகுதி-Iல் திரு.வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட டிமல்லஸ் சாலை, டிகாஸ்டர் சாலை மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் ரூ.26.35 கோடி மதிப்பீட்டில் 5 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும், சிங்கார சென்னை 2.0 பகுதி-IIல் அங்காளம்மன் கோயில் தெரு மற்றும் சிவாராவ் சாலையில் ரூ.3.8 கோடி மதிப்பீட்டில் 930 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், மூலதன நிதியின் கீழ் புளியந்தோப்பு பிரதான சாலையில் ரூ.7.9 கோடி மதிப்பீட்டில் 2050 மீட்டர் நீளத்திற்கு புதிய  மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று (29.08.2022) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தாயகம் கவி அவர்கள், அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி. இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர்கள் திரு.விஷூ மஹாஜன், இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி) அவர்கள், திரு.எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., (மத்திய வட்டாரம்) அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: