கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் முதல்வருடன் சந்திப்பு: மகளின் மரணத்துக்கு விரைவில் நீதி கிடைக்க கோரிக்கை

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தனியார் பள்ளி, பேருந்துகளை சிலர் சேதப்படுத்தினர். இது சம்பந்தமான விசாரணை நடந்து வருகிறது. இறந்த மாணவி ஸ்ரீமதியின் இரண்டு உடற்கூறாய்வு முடிவுகள் வீடியோ பதிவுகளுடன் புதுவை ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்த ஜிப்மர் மருத்துவ குழுவினர், தங்கள் ஆய்வறிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் சமர்ப்பித்தனர். அதேபோன்று, உயிரிழந்த மாணவியின் தோழிகள் இரண்டு பேர் நீதிபதி முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வியிடம் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார். இந்நிலையில், மரணம் அடைந்த பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி நிருபர்களிடம் கூறும்போது, “எனது மகள் ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க வேண்டும். விசாரணையை வேகமாக நடத்தி, குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும். கலவரத்தில் ஈடுபடாத அப்பாவி பள்ளி மாணவர்களையும் போலீசார் கைது செய்கிறார்கள். இந்த சம்பவத்தில் அவர்களுக்கு சம்பந்தமில்லை. அதனால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ஜாமீன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கையாக அளித்துள்ளோம்.

முதல்வரும், குற்றவாளிகளை தப்பிக்க விட மாட்டோம் என்று எங்களிடம் உறுதி அளித்துள்ளார். உடல்கூறு ஆய்வில் சில விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளது. நாங்கள் கேட்ட டாக்டரை கொடுத்திருந்தால் உடற்கூறாய்வு நியாயமாக இருந்திருக்கும். சிபிசிஐடி போலீசை முழுமையாக நம்பிக் கொண்டு இருக்கிறோம். பள்ளி நிர்வாகம் சிசிடிவி விவரங்களை எங்களிடம் காட்டவில்லை. இதனால் அவர்கள் தரப்பில் தவறு இருப்பதாக நினைக்கிறோம். எங்களுக்கும் அவர்கள் தொடர்ந்து இடையூறாக உள்ளனர். ஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதி கிடைக்க முதல்வர் முழு முயற்சி செய்வார் என்று முழுமையாக நம்புகிறோம். சிபிசிஐடி விசாரணை விவரங்களை பெற்றோர் என்ற முறையில் எங்களுக்கும் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

Related Stories: