வீரசோழபுரம் சிவன் கோயிலில் திருட்டுப்போன நடராஜர் உள்பட 6 சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு: சிலை திருட்டு தடுப்பு பிரிவு மீட்க நடவடிக்கை; அரசிடம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்ட 11ம் நூற்றாண்டை சேர்ந்த நடராஜர், தட்சிணாமூர்த்தி உள்பட 6 சிலைகளை அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்து மீட்பதற்கான ஆவணங்களை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள 900 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 1960ம் ஆண்டு நடன கோலத்தில் உள்ள நடராஜர், வீனாதாரி தட்சிணாமூர்த்தி, துறவி சுந்தரர் தனது மனைவியுடனான சிலை மற்றும் திரிபுராந்தகம் மற்றும் திரிபுரசுந்தரி ஆகிய 6 சிலைகள் திருடப்பட்டன.

திருடப்பட்ட சிலைகளை மீட்க யானை ராஜேந்திரன் கொடுத்த புகாரின்படி சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலைகளின் பழைய படங்கள் குறித்து ஆய்வு செய்த போது, திருடப்பட்ட சிலைகளின் புகைப்படங்கள் புதுச்சேரியில் உள்ள இந்தோ- பிரெஞ்சு நிறுவனம் கடந்த 1956ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கிடைத்தது. அந்த புகைப்படங்களை வைத்து இணைய தளம் மூலம் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. அப்போது அமெரிகாவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்தது தெரியவந்தது.

பிறகு அமெரிக்கா அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளின் புகைப்படத்துடன் இந்தோ-பிரெஞ்சு நிறுவனத்தால் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் சென்னை காமராஜர் சாலையில் உள்ள தடய அறிவியல் துறை ரசாயன ஆய்வாளர்கள் மூலம் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு உறுதி செய்த போது, வீரசோழபுரம் கோயிலில் இருந்து திருடப்பட்ட 6 சிலைகள் என உறுதியானது. அதைதொடர்ந்து சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து பல கோடி மதிப்புள்ள 6 சிலைகளையும் யுனெஸ்கோ ஒப்பந்தத்தின்படி மீட்பதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு முறையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் அமெரிக்காவில் உள்ள வீரசோழபுரம் சிவன் கோயிலுக்கு சொந்தமான 6 சிலைகளும் மீட்கப்படும் என்று சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: