வடபழனி காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு: ரோந்து வாகனத்தை இயக்கி குறை கேட்டார்

சென்னை: தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, வடபழனி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அடிக்கடி காவல் நிலையங்களை ஆய்வு செய்து, அங்கு பணியாற்றும் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ள வடபழனி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவரை, வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன், வடபழனி சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாபு மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி வரவேற்றனர்.

அப்போது, டிஜிபி அனைவரிடமும், மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களின்படி  குறைகளை உடனுக்குடன் களைய வேண்டும் என்று உத்தரவிட்டார். பிறகு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை ஆய்வு செய்து அதற்கான விளக்கங்களை இன்ஸ்பெக்டர்களிடம் கேட்டறிந்தார். வடபழனி காவல் சரகத்தில் குற்ற சம்பவங்கள், சாலை விபத்துகள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், ரோந்து வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று, டிஜிபி சைலேந்திரபாபுவே நேரடியாக வாகனத்தை இயக்கி பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களிடம் அவர்களை குறைகளை கேட்டறிந்ததோடு இல்லாமல் காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு கட்டாயம் அளிக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டார். காவல் நிலையத்தில் நள்ளிரவு டிஜிபி திடீர் சோதனையில் ஈடுபட்டதால் வடபழனியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: